வியாழன், 1 ஜூலை, 2021

கோவிட் மரணங்களுக்கு இழப்பீடு; 6 வாரங்களுக்குள் வழிகாட்டுதல்களை உருவாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

 30 06 2021 கோவிட் -19 பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடுத் தொகை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை 6 வாரங்களுக்குள் உருவாக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு (என்.டி.எம்.ஏ) உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அளிட்த தீர்ப்பில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கக்கூடிய இழப்பீடு தொகையை 6 வாரங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.

கோவிட் 19 வைரஸ் பாதிப்பால் இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரிய மனுவில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு, இழப்பீடு தொகையை மாநில அரசுகள் செலுத்த முடியாது என்று தெரிவித்தது. மேலும், இதில் அரசின் சுகாதாரத் தலையீடுகள் உட்பட ஒரு பரந்த அணுகுமுறைக்கு ஆதரவாக மத்திய அரசு வாதிட்டது.

மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், கோவிட் 19 பாதிப்பால் இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும் ரூ .4 லட்சம் இழப்பீடு தொகை அளிப்பது என்பது மாநில அரசுகளின் சக்திக்கு அப்பாற்பட்டது என்று தெரிவித்தது. மேலும், கொரோனா பாதிப்பு மற்றும் அதன் பாதிப்பு தொடர்பாக இறந்த அனைவரின் உறவினர்களுக்கும் ரூ.4 லட்சம் வழங்கப்பட்டால், அது மாநில பேரிடர் நிவாரண நிதியின் முழுத் தொகையையும் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்று வாதிட்டது.

பொது சுகாதாரம் என்பது அரசியலமைப்பின் 7 வது அட்டவணையின் கீழ் மாநில அரசின் விவகாரம் என்றும் அனைத்து மாநிலங்களுக்கும் எஸ்.டி.ஆர்.எஃப்-க்காக அறிவிக்கப்பட்ட 12 பேரழிவுகளுக்கு 2021-22ம் ஆண்டுக்கான நிதி ரூ.22,184 கோடி என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியது.

இதுவரை 3.98 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர் என்று சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/india/covid-19-deaths-compensation-supreme-court-order-318946/