சனி, 17 ஜூலை, 2021

பாலியல் வன்கொடுமை முயற்சி; தற்காப்புக்காக கொலை செய்த பெண்; விடுவித்த போலீஸ்

 சென்னை அருகே மீஞ்சூரில் 21 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்த நபரை அந்த பெண் தற்காப்புக்காக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் அந்த பெண் தற்காப்புக்காக கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்து விடுவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 40 வயது அடையாளம் தெரியாத நபரை 21 வயது பெண் கொலை செய்த சம்பவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் போலீசார், அந்த பெண் மீது தற்காப்புக்காக கொலை செய்தார் என்று ஐபிசி 100 பிரிவில் வழக்குப்பதிவு செய்து அவரை வியாழக்கிழமை விடுவித்துள்ளனர்.

மீஞ்சூரில் உள்ள ஒரு தனியார் மீன் பண்ணை அருகே கொலையான நபரின் உடலைக் கைப்பற்றிய மீஞ்சூர் போலீசார் முதலில் சந்தேக மரணம் என்றே வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது: 2 குழந்தைகளுக்கு தாயான 21 வயது பெண் மீஞ்சூரில் உள்ள ஒரு மீன் பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அந்த பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த 40 வயது ஆண் யாரும் இல்லாத நேரம் பார்த்து அந்த பெண்ணை பலவந்தமாக தனிமையான இடத்திற்கு இழுத்துச் சென்று அங்கே பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். அந்த நபரிடம் இருந்து தப்பிக்க போராடிய அந்த பெண், அந்த நபரை கீழே தள்ளிவிட்டுள்ளார். அப்போது அந்த நபரின் தலை அங்கே இருந்த ஒரு கல்லில் இடித்து சுயநினைவிழந்து மயங்கி விழுந்துள்ளார். பின்னர், அந்த பெண், மயங்கி விழுந்து கிடந்த நபரை இழுத்துக்கொண்டு வந்து சாலையில் போட்டுள்ளார்.

இதையடுத்து, அந்த பெண் நடந்த சம்பவத்தை, அதே பண்ணையில் வேலை செய்து வரும் தனது கணவர் பூங்காவனத்திடம் சென்று கூறியுள்ளார். இதையடுத்து, பூங்காவனமும் மற்ற தொழிலாளர்களும் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கே சுயநினைவின்றி விழுந்து கிடந்த நபரின் உடல் அருகே சில கிராமத்தினர் சிலரும் திரண்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மீஞ்சூர் காவல் ஆய்வாளர் வடிவேல் முருகன் தலைமையிலான போலீசார், உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளனர். விரைந்து வந்த மருத்துவர்கள் அந்த நபர் ஏற்கெனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.

இதையடுத்து, சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்த போலீசார் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

உயிரிழந்த நபர் குறித்து போலீசார் அந்த பகுதியில் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அங்கே பக்கத்தில் வசிக்கும் மக்கள் அந்த நபரை இரண்டு முறை அந்தப் பகுதியில் பார்த்ததாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த நபர் அங்கே இருக்கும் இந்த கம்பெனியிலும் வேலை செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த நபரை அந்த பெண் தற்காப்புக்காக தள்ளிவிடும்போது தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி வி.வருண் குமார் ஊடகங்களிடம் கூறுகையில், “இந்த வழக்கின் உண்மை தன்மையைக் கண்டறிந்த பின்னர், அந்தப் பெண் ஐபிசி 100 வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்” என்று கூறினார்.

16 07 2021 

source https://tamil.indianexpress.com/tamilnadu/woman-kills-man-to-save-herself-from-rape-in-minjur-police-release-her-323565/