வியாழன், 15 ஜூலை, 2021

ஹரியானா விவசாயிகள் மீது தேசத்துரோக வழக்கு

 

ஹரியானா துணை சபாநாயகர் சென்றுக் கொண்டிருந்த கார் மீது தாக்குதல் நடத்திய விவசாயிகள் 100 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.

டெல்லியில் மத்திய அரசின் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து ஹரியானாவின் சிர்சா மாவட்டத்தில் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. அப்போது அந்த வழியாக காரில் சென்றுகொண்டிருந்த ஹரியானா துணை சபாநாயகர் ரன்வீர் கங்வா மீது விவசாயிகள் திடீரென கல்வீசியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் அவர் காயமின்றி உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து விவசாயிகள் 100 பேரின் மீது தேசத்துரோக சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 11ம் தேதி நடந்த இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபப்பை ஏற்படுத்தியிருந்தது. தேசத்துரோக வழக்கைத் தொடர்ந்து, விவசாய சங்கத்தின் இரு தலைவர்கள் மீது கொலை முயற்சி வழக்கும் பதியப்பட்டுள்ளதாக ஹரியானா காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து சம்யுக்த் கிஷன் மோச்சா விவசாய சங்கம் காவல்துறையின் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்துள்ளது. இது திட்டமிட்ட சதி என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தற்போது ஹரியானாவில் பாஜக ஆட்சி பொறுப்பில் உள்ளது. முன்னதாக இன்று காலை, “ஆங்கிலேயர் கால தேசத்துரோக சட்டம் தற்போது தேவையா?” என உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியிருந்ததைத் நிலையில் ஹரியானாவில் விவசாயிகள் மீது இச்சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

source https://news7tamil.live/100-farmers-face-sedition-case-after-allegedly-attacking-bjp-leaders-car.html