15 3 2022
உக்ரைன் தலைநகர் கீவ்-ல் இன்று இரவு 8 மணி முதல் வரும் 17ம் தேதி காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது. ஏவுகணைகளைக் கொண்டும், குண்டுகளை கொண்டும் ரஷ்யா கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. தொடக்கத்தில் பெரிய நகரங்கள் மட்டுமே குறிவைக்கப்பட்ட நிலையில், தற்போது சிறிய நகரங்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனின் பாதுகாப்பு நிலைகள், அரசின் முக்கிய கட்டடங்கள் மட்டுமின்றி, குடியிருப்பு வளாகங்களும் சேதமடைந்துள்ளன.
உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில், புதிய கட்டுப்பாடுகளை உக்ரைன் அரசு பிறப்பித்துள்ளது. குறிப்பாக தலைநகர் கீவ்-ல், இன்று இரவு 8 மணி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் 17ம் தேதி காலை 7 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் ஊரடங்கு கால கட்டத்தில் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு முகாம்களுக்குச் செல்வதற்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ரஷ்ய ராணுவத்தைச் சேர்ந்த 13 ஆயிரத்து 500 பேர் கொல்லப்பட்டுவிட்டதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. 81 போர் விமானங்கள், 95 ஹெலிகாப்டர்கள், 404 டேங்குகள், ஆயிரத்து 279 பாதுகாப்பு வாகனங்கள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டு விட்டதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
source https://news7tamil.live/curfew-in-kiev-from-8pm-tonight-until-7am-on-the-17th.html