திங்கள், 28 மார்ச், 2022

பாதுகாப்பு குளறுபடி; பொது நிகழ்ச்சியில் நிதிஷ் குமார் மீது தாக்குதல்: வீடியோ

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தனது சொந்த ஊரான பக்தியார்பூரில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த போது, பாதுகாப்பு குறைபாடு காரணமாக மர்மநபர் ஒருவர் அவரை தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார், சுதந்திரபோராட்ட தியாகி ஒருவரின் சிலைக்கு மரியாதை செலுத்த தனது சொந்த ஊரான பக்தியார்பூருக்கு வந்துள்ளார். அங்கு சஃபர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான ஷில்பத்ரா யாஜியின் சிலைக்கு மரியாதை செலுத்தவேண்டி படிக்கட்டியில் ஏறிய நிதிஷ்குமார் மாலை அணிவிக்கும்போது திடீரென மேடைக்கு வந்த மர்மநபர் ஒருவர் நிதிஷ்குமாரை தாக்கியுள்ளார். இந்த தாக்குதலின் போது பதிவான சிசிடிவி கட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. 


இந்த கேமராவில் பதிவான கட்சிகளை வைத்து அந்த மர்ம நபரை கைது செய்ய போலீசார், அந்த நபரை காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில அமைச்சர் அசோக் சவுத்ரி, இந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. பாதுகாப்பு “பொறுப்பில் இருந்தவர்களின் ஒரு பகுதியினர் இந்த சம்பவத்தில் துணை நின்றுள்ளனர். முதலமைச்சரின் பாதுகாப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

முதல்வரை தாக்கிய அந்த நபரை போலீசார் கைது செய்தபோது,”அவரை அடிக்காதீர்கள். அவர் என்ன சொல்கிறார் என்பதை முதலில் கண்டுபிடியுங்கள்” என்று முதல்வர் தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பாட்னா காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அந்த நபர் மனநிலை சரியில்லாதவர் என்று தெரியவந்துள்ளது.

இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு குறைபாடுகள் குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், ஜனநாயக வழிகளில் போராட்டம் நடத்துமாறு மக்களை அறிவுறுத்தியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/india/national-news-bihar-cm-nithish-kumar-attacked-in-own-native-431633/