இந்தியா போன்ற ஒரு பல கலாச்சாரங்களை கொண்ட நாடுகளில் இருக்கும் ஒவ்வொரு இயற்கைச் சூழலும் தன்னகத்தே சிறந்த, தனித்துவம் மிக்க உயிரினங்களைக் கொண்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நீலகிரி வரையாடு, நீலகிரி சோலைக்கிளி, நீலகிரி மார்டின், செந்நாய் போன்றவை எல்லாம் மேற்குத் தொடர்ச்சி மண்ணிற்கே உரிய உயிரினங்கள்.
ஒரு சில உயிரினங்களின் சில குறிப்பிட்ட பிரிவுகள் அண்டை நாடுகளிலும் வாழும். உதாரணத்திற்கு இருவாச்சி பறவை. இந்தியன் கிரேட் ஹார்ன்பில் மேற்குத் தொடர்ச்சி மலையில் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் அதிகம் காணப்பட இதன் சில பிரிவுகளான ஓரியண்டல் பைட் ஹார்ன்பில், ரீத்ட் ஹார்ன்பில் போன்றவை அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் காணப்படுகிறது.
இருவாச்சிப் பறவைகளின் அலகுகள் மிகவும் அழகானவை. அப்பறவைகள் வேட்டையாடப்பட்டு அதன் அலகை தலையில் கிரீடமாக சூடிக் கொள்ளும் வழக்கத்தைக் கொண்டவர்கள் நியிஷி பழங்குடியினர். அருணாச்சலப் பிரதேசத்தில் இந்த பறவைகளின் எண்ணிக்கை குறைந்து போனதற்கு மிக முக்கிய காரணமாக வேட்டையாடுதல் கூறப்பட்டது.
ஆனால் இன்று இம்மக்கள் தங்களால் இயன்ற அளவு இருவாச்சிப் பறவைகளை பாதுகாக்கின்றனர். ஒரு சிலர் தத்தெடுத்துக் கொள்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு, அழிவின் விளிம்பில் இருக்கும் ஹார்ன்பில் எனப்படும் இருவாச்சிப் பறவைகளை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் வெற்றிப் பயணத்தை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
Hornbill Nest Adoption Program
அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள பக்கே புலிகள் காப்பகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் ஹார்ன்பில் பறவைகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு 2012ல் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் இருவாச்சிப் பறவைகளின் கூடுகளை தத்தெடுக்கும் Hornbill Nest Adoption Program திட்டம். கிரேட் ஹார்ன்பில் (Great Hornbill), ரூஃபஸ்-நெக்ட் ஹார்ன்பில் (Rufous-necked hornbill), ரீத்ட் ஹார்ன்பில் (Wreathed Hornbill) மற்றும் ஓரியண்டல் பைட் ஹார்ன்பில் (Oriental Pied Hornbill) போன்ற 4 இருவாச்சி பிரிவுகள் இப்பகுதியில் வசித்து வருகின்றன. இவற்றில் கடைசி மூன்றும் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் சிவப்புப் பட்டியலில் (IUCN Red List) அழியக் கூடிய தருவாயில் உள்ள பறவைகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பக்கே புலிகள் காப்பகத்தில், இப்பறவைகள் கூடு கட்டும் ஒவ்வொரு மரமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மரத்தையும் பழங்குடி மக்கள் தத்தெடுத்து வருகின்றனர். மற்ற உயிரினங்கள் போன்றே, ஹார்ன்பில்களும் தங்களின் இனப்பெருக்க காலத்தின் போது, தலைமுறை தலைமுறையாக தங்களின் இனம் எந்த பாதுகாப்பான சூழலில் இனச்சேர்க்கை புரிந்து, ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கியதோ அதே இடத்திற்கு வலசை வருகின்றன. அப்படி வரும் ஹார்ன்பில்களின் மிக நீண்ட “அடை” காக்கும் காலம் முழுவதும், இக்கூட்டிற்கு எத்தகைய தீங்கும் ஏற்படாமல் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர் நியிஷி பழங்குடியினர்.
”நேச்சர் கான்சர்வேஷன் சொசைட்டி என்ற அரசு சாரா அமைப்பும் நிஷியி பழங்குடி தலைவர்களின் கவுன்சிலான கோரா அபே சொசைட்டியும் கூட்டு முயற்சியாக பறவைகளை பாதுகாக்கும் திட்டம் உருவானது” என்று இந்து நாளிதழில் ‘A new feather in his cap’ என்ற கட்டுரையில் எழுதியுள்ளார் கரிஷ்மா ப்ரதான்.
பணிகளும் சவாலும்
தாய்லாந்தில் உள்ள ஹார்ன்பில்களை பாதுகாக்கும் பொருட்டு பிலாய் பூன்ஸ்வாத் (Pilai Poonswad) மேற்கொண்ட இயக்கத்தை அடிப்படையாக கொண்டு இந்த தத்தெடுக்கும் இயக்கம் துவங்கப்பட்டது. ஹார்ன்பில்கள் தங்களின் குஞ்சுகளை பாதுகாக்க, தாயையும் சேயையும் மரங்கள் பாதுகாக்க, மரங்களை நியிஷி பழங்குடிகள் பாதுகாக்க, இந்த மொத்த திட்டத்திற்கான செலவுகளையும் தன்னார்வலர்களும் அமைப்புகளும் கவனித்துக் கொள்கின்றனர்.
பக்கே புலிகள் காப்பகத்தில் உள்ள மரங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டிருந்தாலும் கூட அதற்கு வெளியே, அதனை ஒட்டி அமைந்திருக்கும் ”பாப்பும்” காப்புக் காடுகளில் இத்தகைய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. 35க்கும் மேற்பட்ட மரங்களை தத்தெடுத்துள்ள நியிஷி மக்கள், சரியான நேரத்திற்கு இனச்சேர்க்கைக்காக பறவைகள் பக்கே புலிகள் காப்பகத்திற்கு வருகின்றதா என்ற ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். மேலும் அந்த மரங்களுக்கு எந்த விதமான பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க வாரத்திற்கு ஒரு முறை காட்டுக்குள் பயணம் செய்கின்றனர். முட்டைகளின் எண்ணிக்கை, குஞ்சுகளின் எண்ணிக்கை, பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறும் அடுத்த தலைமுறை பறவைகளின் எண்ணிக்கை என்று அனைத்தையும் தரவுகளாக தொகுத்து வைத்துள்ளனர் இம்மக்கள்.
”2012ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்திற்கு பிறகு ஒரு குறிப்பிட்ட மரத்தில் உள்ள கூட்டில் இருவாச்சிகள் வந்து தங்குவதில்லை” என்று தன்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கரிஷ்மா, ”அந்த மரத்தைச் சுற்றி 2016ம் ஆண்டு அப்பகுதிக்கே உரிய மரங்களையும் செடிகளையும் வளர்க்க ஆரம்பித்தோம். விபத்து ஏற்பட்ட 10 ஆண்டுகள் கழித்து, அந்த மரங்களை நாடி பறவைகள் வருகின்றன” என்றும் மேற்கோள் காட்டியுள்ளார்.
போதுமான வேலை வாய்ப்புகள் மற்றும் வருமானம் இல்லாத காரணங்களால் அடர் காடுகளை நம்பியிருக்கும் பழங்குடி மக்கள் இந்த மரங்களை வெட்டி விற்பனை செய்து வருகின்றனர். இது பறவைகளுக்கும் பேராபத்தாய் போய் முடிகிறது. பழங்குடி மக்களுக்கு, காடுகளின் விவசாயிகளாக திகழும் ஹார்ன்பில்கள் பற்றிய புரிதலை ஏற்படுத்தி அவற்றை பாதுகாக்க கரம் கோர்ப்பது எளிமையான காரியம் இல்லை. இதுவரையில் 21 பேர் மரங்களை தத்தெடுத்துள்ளனர். 260 பேர் ஹார்ன்பில்களை தத்தெடுத்து, இந்த திட்டம் திறம்பட செயல்பட தேவையான நிதி உதவியை வழங்கி வருகின்றனர். அதனால் தான் இந்த திட்டம் இன்று பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.
Hornbill Nest Adoption Program திட்டத்திற்கு சான்சுவரி இந்தியா 2014, இந்தியா பயோடைவர்சிட்டி விருது 2016 ஆகியவை வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருவாச்சி திருவிழா என்று நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டு அங்கே, சுற்றுலா விரும்பிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு இருவாச்சிப் பறவையின் தேவை மற்றும் பாதுகாப்பு குறித்து வகுப்புகள் எடுக்கப்பட்டன. பழங்குடிகள் இல்லாமல் எப்படி காடுகளை பாதுகாப்பது? பழங்குடி மக்களை நீக்கிவிட்டு, ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரிகள் ஏன் இத்தகைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறார்கள் என்பது போன்று சமூக செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். தாய்லாந்தில் இப்படி ஒரு திட்டம் வெற்றி அடையும் போது, அருணாச்சலப் பிரதேசத்தில் இத்தகைய திட்டம் ஒன்று கைகூடும் போது, உள்ளூர் பழங்குடி மக்களை உள்ளடக்கிய இது போன்ற பாதுகாப்பு திட்டங்களை ஏன் தமிழக வனத்துறையும அறிமுகம் செய்யக் கூடாது என்ற கேள்வியும் தற்போது எழுகிறது.
source https://tamil.indianexpress.com/science/hunter-tribes-in-arunachal-pradesh-turned-into-protectors-of-hornbills-431735/