27 3 2022
தொழில் செய்வதற்கும், முதலீடு செய்வதற்கும், தமிழ்நாட்டின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
துபாயில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொழில் நிறுவனங்களுடன் ரூ.2,600 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரக முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது முதலமைச்சராக பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக துபாய் வந்துள்ளதாகக் கூறிய அவர், வர்த்தகம் அதிகம் நடைபெறும் நகரமாக துபாய் உள்ளது எனவும் உயர் தொழில் நுட்ப போக்குவரத்தில் துபாய் தலைசிறந்து விளங்குவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய ஏற்றுமதியின் நுழைவு வாயிலாக துபாய் உள்ளது எனவும் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதாகவும், தொழில் புரிவதற்கு தமிழ்நாட்டில் வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டை முதலீட்டு மையமாக மாற்றுவதே தனது குறிக்கோள் என்றும், எண்ணற்ற பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி நிலையங்களை கொண்டுள்ளன எனவும் தெரிவித்தார்.
source https://news7tamil.live/tamil-nadu-government-signed-rs2600-crore-investment-agreement.html