செவ்வாய், 22 மார்ச், 2022

பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. , சிலிண்டர் விலையும் அதிகரிப்பு!

 21 3 2022 

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை இன்று லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்துள்ளது. புதிய விலைகள் மார்ச் 22, காலை 6:00 மணி முதல் அமலுக்கு வரும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் டீலர்களுக்கு தெரிவித்திருந்தது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

இந்நிலையில், 137 நாட்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை  இன்று உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து, ரூ.102.16 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, ரூ. 92.19 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளர் மற்றும் நுகர்வோராக இருக்கும் இந்தியா, அதன் எண்ணெய் தேவையில் 85% வெளிநாட்டு சந்தைகளில் இருந்து பெறுகிறது.

இதற்கிடையே ரஷ்யா-உக்ரைன் நெருக்கடியின் விளைவாக இந்த மாத தொடக்கத்தில் உலக கச்சா எண்ணெய் விலை, பீப்பாய் ஒன்றுக்கு ரூ. 110 டாலர்களாக உயர்ந்த போதிலும், இந்தியாவில் முக்கியமான மோட்டார் பெட்ரோல் விலை நான்கு மாதங்களுக்கும் மேலாக மாறவில்லை.

தொடர்ந்து’ எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக ஆர்டர் செய்யும் வழக்கத்தை விட, பஸ் ஃப்ளீட் ஆபரேட்டர்கள் மற்றும் மால்கள் போன்ற மொத்த பயனர்கள் பெட்ரோல் பங்க்களில் எரிபொருளை வாங்க வரிசையில் நிற்பதால், பெட்ரோல் பம்ப் விற்பனையும் அதிகரித்துள்ளது.

மேலும், உலகளவில் எண்ணெய் விலை 40 சதவீதம் அதிகரித்ததைத் தொடர்ந்து, மொத்த நுகர்வோருக்கான டீசல் விலை சமீபத்தில் லிட்டருக்கு, சுமார் ரூ.25 உயர்த்தப்பட்டது.

குறிப்பாக இந்தியாவில் உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி முதல் விலைகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், சமீபத்தில் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து, சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. 5 மாதங்களுக்கு பிறகு, வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 அதிகரித்து, ரூ. 967-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இப்படி ஒரே நாளில் பெட்ரோல் டீசல் விலை மற்றும் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் கவலையில் இருக்கின்றனர்.   


source https://tamil.indianexpress.com/tamilnadu/petrol-diesel-prices-hike-in-chennai-after-137-days-428611/