செவ்வாய், 22 மார்ச், 2022

லஞ்ச பணத்துடன் சிக்கிய அதிகாரியை கைது செய்யாமல் டிரான்ஸ்ஃபர் செய்வதா?

21 3 2022 

லஞ்ச பணத்துடன் சிக்கிய அதிகாரியை கைது செய்யாமல் டிரான்ஸ்ஃபர் செய்வதா? என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக போக்குவரத்து துறையின், சென்னை கமிஷனர் ஆபீசில் துணை ஆணையராக பணியாற்றியவர் நடராஜன். இவர் மீது புகார்கள் வந்ததையடுத்து, கடந்த வாரம் லஞ்ச ஒழிப்பு போலீசார், சென்னை எழிலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். இதில், நடராஜனின் உதவியாளர் முருகன் தங்கியிருந்த அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அந்த அறையில் ரூ37 லட்சம் ரொக்கம் மற்றும் பண பரிவர்த்தனைக்கான சான்றுகளும் கிடைத்தன.

இந்தநிலையில், இரண்டு நாளைக்கு முன்பு, நடராஜனின் உதவியாளர் முருகன், நாகர்கோவில் ஆர்டிஓ அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். தற்போது துணை ஆணையர் நடராஜனும் திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, தமிழக கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

இந்த திடீர் இடமாற்ற உத்தரவு பல தரப்பிலும் சந்தேகத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தி வருகிறது. போக்குவரத்து துறை ஆணையர் சிக்கிய இந்த விவகாரத்தில், துறை வாரியாக பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இது தொடர்பான புகார்களும் மேலிடத்துக்கு சென்றதாக கூறப்பட்டுள்ள நிலையில், என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.

இந்நிலையில் தான், போக்குவரத்து துணை ஆணையர் நடராஜன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் திருநெல்வேலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, லஞ்ச பணத்தை பிடித்தும்கூட, ஒரு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காமல், டிரான்ஸ்பர் செய்துள்ளது சரியா என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,”சென்னை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் கடந்த 14-ஆம் தேதி நடத்தப்பட்ட ஊழல் ஒழிப்பு சோதனையில் ரூ.35 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு காரணமான துணை ஆணையர் -1 நடராஜன் எந்த தண்டனையும் இல்லாமல் நெல்லைக்கு இடமாற்றம் மட்டும் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

பணத்துடன் சிக்கிய அதிகாரி குறித்து விசாரித்த போது, அவர் பதவி உயர்வு வழங்க 7 பேரிடமிருந்து தலா ரூ. 5 லட்சம் வசூலித்தது உறுதியாகியுள்ளது. பதவி உயர்வுக்காக மேலும் 35 பேரிடமிருந்து ரூ.1.75 கோடி வசூலித்ததும் தெரியவந்துள்ளது. அவர் மீது காவல்துறை வழக்கும் பதிவு செய்திருக்கிறது!

சம்பந்தப்பட்ட அதிகாரி 2019-ஆம் ஆண்டில் செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. ஆக இருந்த போது அவரது அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனையிட்டு, ரூ.88 லட்சம் பணத்தை கைப்பற்றியதுடன், வழக்கும் பதிந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அவரது துறையினரே பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர்!

கையூட்டு பணத்துடன் சிக்குபவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், எந்த சோதனையும், எந்த கைது நடவடிக்கையும் இல்லாமல் இட மாற்றத்துடன் அந்த ஊழல் அதிகாரி தப்பவிடப்பட்டிருக்கிறார். இது பெரும் அநீதி!

ரூ.100 கையூட்டு வாங்கியதற்காக கிராம நிர்வாக அதிகாரிகள் கைது செய்யப்படுகின்றனர். ஆனால், ரூ. 2.10 கோடி கையூட்டு வாங்கிய அதிகாரி தப்பவிடப்படுகிறார் என்றால், அது ஊழலை ஒழிக்க உதவாது. ஊழல் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்வதுடன், கைது செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/anbumani-ramadoss-questions-transport-commissioner-transfer-428574/