சனி, 26 மார்ச், 2022

மத்திய அரசிடம் இருந்து ரூ. 1,326 கோடி பெறுவதில் தமிழ்நாடு அரசு தோல்வி

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் கால தாமதம் ஏற்பட்டதால் ரூ.1,326.6 கோடியை மத்திய அரசிடம் இருந்து பெறுவதில் தமிழக அரசு தோல்வி அடைந்தது என்று தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

வார்டுகளின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்ததால் 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து தேர்தல்கள் நிலுவையில் இருந்தன.

2017-18 முதல் 2019-20 வரை செயல்திறன் மானியம் ரூ.1,326.6 கோடி மத்திய அரசு விடுவிக்கவில்லை. அனைத்து தகுதி வரம்புகளையும் பூர்த்தி செய்துவிட்ட போதிலும் மத்திய அரசு அந்தத் தொகையை செலுத்தவில்லை என்று தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு குழுக்கள் அமைக்கப்படாததாலும், தேர்தல் நடத்தப்படாததாலும்தான் இந்த தொகை விடுவிக்கப்படவில்லை. மாவட்ட திட்ட குழு மற்றும் பெருநகர திட்ட குழு ஆகியவையும் அமைக்கப்படவில்லை. அவை இல்லாத காரணத்தால்
மாவட்ட மற்றும் பெருநகர வளர்ச்சித் திட்டம் தயாரிக்கப்படவில்லை.

1998ஆம் ஆண்டிலிருந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரி திருத்தி அமைக்கப்படவில்லை. 2008இல் இருந்து பிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைப்புகளிலும் சொத்து வரி திருத்தப்படவில்லை.

தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் படி, சொத்து வரி ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தப்பட வேண்டும். கடந்த 2003இல் சென்னையிலும், 2013 இல் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் சொத்து வரி திருத்தப்பட்டு இருக்க வேண்டும்.

இருப்பினும், சொத்து வரிகள் திருத்தப்படாததால், 2013 முதல் 2018 வரை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சந்தித்த வருவாய் இழப்பு ரூ.2,598.2 கோடி ஆகும். இது உள்ளாட்சி அமைப்புகளின் சுயாட்சியை சமரசம் செய்ய வழிவகுத்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மார்ச் 31, 2020 அன்று முடிவடைந்த ஆண்டிற்கான 74 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திறன் தணிக்கை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/the-cag-report-tabled-in-the-assembly-on-thursday-had-430450pointed-out-that-the-state-did-not-receive/

Related Posts: