23 3 2022
தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 18-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-2023-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, மார்ச் 19-ம் தேதி 2022-2023-க்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மார்ச் 21, 22, 23 தேதிகளில் பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இன்றைய சட்டப்பேரவை நிழ்ச்சிகளின் ஹைலைட்ஸை இங்கே காணலாம்.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு; அண்ணாவின் வரிகளை குறிப்பிட்ட ஸ்டாலின்
அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்கள் நிறுத்தப்படுவதாக எழுந்த கேள்விக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்து பேசுகையில், “இது எனது அரசல்ல, நமது அரசு. அந்த கருத்தினைப் பின்பற்றி, இந்த அவையில் நமது அரசின் நிலைப்பாட்டை விளக்கிட நான் விரும்புகிறேன். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் வேலையில், எதிர்க்கட்சிகளின் கேள்வி 10 மாதக் குழந்தையிடம் 10ம் வகுப்பு மதிப்பெண் என்ன என்று கேட்பது போல உள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, இந்த குழந்தை 10ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறுவது மட்டுமல்ல, பட்டப்படிப்பிலும் பதக்கம் வெல்லும். நீங்கள் சுட்டிக்காட்டும் ஒவ்வொரு முறையும், எங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்து, நீங்கள் வைக்கக்கூடிய நினைவூட்டல் என்றே நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். மேலும், ஒன்றை இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன். நமது அரசு சொன்னதை மட்டுமல்ல, சொன்னதற்கு மேலும் செய்துகாட்டும் அரசு என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். இறுதியாக ஒரு கருத்தை இந்த அவையில் பதிவிட விரும்புகிறேன். எதிர்க்கட்சி கடந்த 10 ஆண்டு காலத்தில் நிறைவேற்றாமல் போன அறிவிப்புகளில், மக்களுக்கு ஏதேனும் மிகவும் பயன்படும் தேவை என்று கண்டறியப்பட்டால், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற பேரறிஞர் அண்ணாவின் வாக்கிற்கு ஏற்ப மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி, அவற்றையும் நாங்கள் நிறைவேற்றுவோம் என்று உறுதி அளிக்கிறேன்” என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.
விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு: விரைந்து தண்டனை பெற்று தருவதில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருக்கும் – மு.க. ஸ்டாலின்
விருதுநகர் பாலியல் வன்கொடுமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துப் பேசிய மு.க. ஸ்டாலின் பேசியதாவது: “விருதுநகரைப் பற்றி ஒரு பிரச்னை சொல்லியிருக்கிறார். விருதுநகரில் 22 வயது பெண் பாலியல் வன்புணர்வு புகார் வந்த உடன் 24 மணி நேரத்தில் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மீதியுள்ள 4 பேர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக தற்போது வழக்கு மாநில குற்றப் புலனாய்வு பிரிவு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிசிஐடி கண்காணிப்பாளர் முத்தரசி சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இந்த வழக்கு தனி நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும். விரைந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும். அதிகபட்ச தண்டனை பெற்றுத் தரப்படும் என்பதை ஆணித்தரமாக உறுதிபட நான் இந்த மற்றத்திலே தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த பாலியல் வன்முறை வழக்கில், ஒரு மாதிரி வழக்காக நேரடியாக கண்காணிக்குமாறு காவல்துறை தலைவர் டி.ஜி.பி-க்கு நான் உத்தரவிட்டுள்ளேன். நிச்சயம் பொள்ளாச்சி பாலியல் வழக்கு போல இல்லாமல், வண்ணாரப்பேட்டை 13 வயது சிறுமி பாலியல் வன்முறை வழக்கு போல இல்லாமல், இந்த வழக்கு நிச்சயம் முறைப்படுத்தப்படும். இந்த அரசு எப்படி தண்டனை வாங்கி கொடுக்கிறது. இந்த மாநிலத்துக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே இந்த வழக்கு விரைந்து தண்டனை பெற்றுத் தருவதில் ஒரு முன் மாதிரி வழக்காக இருக்கும். இது போன்று தவறு செய்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கப்போகிறது. இதை எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர்களுக்கும் இங்கே இருக்கக்கூடிய உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று கூறினார்.
தமிழ்நாட்டில் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம் – அமைச்சர் பொன்முடி
நாடு முழுவதும் 45 மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கல்வி பயில பொது நுழைவுத் தேர்வு அவசியம் என்று யுஜிசி அறிவித்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம் என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி சட்டப் பேரவையில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து உயர்கல்வி அமைச்சர் பொன்முடி சட்டப் பேரவையில் கூறியதாவது: “தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு எந்தவிதத்தில் நுழைய முயற்சித்தாலும் அதை முதலமைச்சர் தீவிரமாக எதிர்ப்பார். தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம்” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
இதுவரை 208 வாக்குறுதிகள் நிறைவேற்றம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் இதுவரை 208 வாக்குறுதிகள் திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
முதல்வரானதும் 5 கோப்புகளில் கையெழுத்திட்டேன்; அதில் 4 திட்டங்கள் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றவை. அரசின் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் அறிக்கையில் சொல்லாதவற்றையும் செய்து வருகிறோம். ஆனால், கடந்த ஆட்சியாளர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 537 அறிவிப்புகள் நிலுவையில் உள்ளன; ரேசன் கார்டுதாரர்களுக்கு இலவச செல்போன், பொது இடங்களில் இலவச வைபை வசதி திட்டம் செயல்படுத்தப்படவில்லை.” என்று கூறினார்.
மேலும், 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது. 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படும். ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது
கொரோனா பணியில் உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
காழ்ப்புணர்ச்சிக்கு பெயர்போனது உங்க ஆட்சி; ஓ.பி.எஸ்-க்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலடி
தமிழ்நாடு சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார்.
திமுக அரசு காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தியதாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: “அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, தாலிக்குத் தங்கம் வழங்கக்கூடிய திட்டத்தை நிறுத்தியதாக ஒரு கருத்தை நம்முடைய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இங்கே பதிவு செய்திருக்கின்றார். அ.தி.மு.க தொடங்கிய திட்டங்களை, ஏதோ திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்ததும் நிறுத்தி விடுவதைப்போல ஒரு போலித் தோற்றத்தை இங்கே எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்கள் தனது உரையிலே உருவாக்கியிருக்கிறார்கள்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, முந்தைய உங்களுடைய அரசு திட்டங்களை முடக்குவதற்குப் பெயர் போன அரசு; அது உங்களுடைய அரசு. இது கடந்த காலங்களில், பல நேரங்களில் நிரூபணமாகி இருக்கக்கூடிய உண்மை. ஊடகத்தினர், பொதுமக்கள் என அனைவரும் இதை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆகவே, தலைவர் கலைஞர் அவர்களால், தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் மாபெரும் சட்டமன்ற-தலைமைச் செயலக வளாகம் கட்டப்பட்டு, அன்றைக்குப் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அவர்களால் அது திறந்து வைக்கப்பட்டது. அந்த இடத்தில்தான், சட்டமன்றமும் நடந்திருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்குப்பிறகு, சட்டமன்றம் நடைபெற்ற அந்த இடத்தை மருத்துவமனையாக மாற்றியது யார்?
பேரறிஞர் அண்ணா அவர்களுடைய நூற்றாண்டு விழா நினைவாக, 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 8 மாடிகள் கொண்ட அளவில் ஒரு பெரிய மாளிகையை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை தி.மு.க. ஆட்சி கட்டியது. அந்த மாபெரும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற நினைத்ததும், அதைப் பாழடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டதும் யார்? அங்கிருந்த அண்ணாவினுடைய சிலைக்குக் கீழே கல்வெட்டு இருக்கும். அந்தக் கல்வெட்டில் முதலமைச்சர் கலைஞர் அவர்களது பெயர் இருந்தது. அந்தப் பெயரையே எடுத்த ஆட்சி எது?
கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திலே, கலைஞர் வீடு வழங்கக்கூடிய திட்டத்திலே இருந்த கலைஞர் பெயரை நீக்கியது யார்? செம்மொழிப் பூங்காவிலே, கலைஞருடைய பெயரை மறைப்பதற்காக செடி, கொடிகளை கொண்டுபோய் வைத்து, அதை முழுமையாக மூடி மறைத்தது யார்? கடற்கரைப் பூங்காவில் இருந்த கலைஞர் பெயரை எடுத்தது யார்?
இராணி மேரி கல்லூரியை இடித்துவிட்டு, அங்கிருந்த கல்லூரியை அப்புறப்படுத்த நினைத்தது உங்களுடைய ஆட்சி. அதை இடிக்கக்கூடாது, அந்தக் கல்லூரி பழமையான கல்லூரி, பல நூற்றாண்டுகளைக் கண்டிருக்கக்கூடிய வரலாற்றுச் சிறப்புக்குரிய கல்லூரி என்று நாங்கள் அன்றைக்குத் தி.மு.க. சார்பில் குரல் கொடுத்தோம். அதற்காகச் சிறைபிடிக்கப்பட்டு, சிறைக்குப் போய் பல நாட்கள் இருந்து வந்திருக்கிறோம். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்ததற்குப்பிறகு, அந்தக் கல்லூரி வளாகத்தில் ஒரு கட்டடம் கட்டப்பட்டு, கலைஞர் மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டது. நீங்கள் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, அந்த கலைஞர் மாளிகையில் இருந்த கலைஞர் பெயரை நீக்கியதுதான் உங்களுடைய சாதனை.
ஆகவே, கலைஞர் கொண்டுவந்தார் என்பதற்காகவே சமத்துவபுரங்கள் எல்லாம் பழுதுபார்க்கப்படாமல், அவற்றைப் பேணிப் பாதுகாக்க முடியாத அளவிற்கு, அதைப் பாழடித்தது யார்? உழவர் சந்தைகளை மேலும் மேலும் வலுப்படுத்தக்கூடாது என்று அதை இடித்து மூடியது யார்? தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உடன்குடி பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்-ஐ முடக்கியது யார்? நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், வருமுன் காப்போம் திட்டம் போன்ற இந்தத் திட்டங்களையெல்லாம் உங்கள் ஆட்சியில் முடக்கினீர்கள். அதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.
இன்னொன்று, முக்கியமான விஷயம்; இங்கே மதுரவாயல்-சென்னை துறைமுகம் உயர் மட்டச் சாலைத் திட்டம் குறித்தும் பேசினார்கள். அந்தத் திட்டத்தை முடக்கியது யார்? சமச்சீர் கல்விப் பாடப்புத்தகத்தில் கலைஞர் எழுதிய செம்மொழி வாழ்த்துப் பாடலையும், 7 ஆம் வகுப்புப் பாடத் திட்டத்திலே நாடகக் கலை குறித்த பாடத்தில் கலைஞர் அவர்களது பெயரையும் ஸ்டிக்கரை வைத்து மறைத்தது யார்?
இப்படி வரிசையாக என்னால் சொல்ல முடியும். அதற்காக, பழிவாங்குவதற்காக நாங்கள் செய்கிறோம் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நல்ல திட்டங்கள் எதுவாக இருந்தாலும், முறையான திட்டங்கள் எதுவாக இருந்தாலும், அதை நிறைவேற்றுகிற ஆட்சிதான், கலைஞர் அவர்கள் உருவாக்கித் தந்திருக்கக்கூடிய, எங்கள் தலைமையில் நடைபெறக்கூடிய இந்த ஆட்சி என்பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.” எனத் தெரிவித்தார்.
அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றியவர்களுக்கு மருத்துவத் துறையில் முன்னுரிமை அளித்து பணி – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாடு சட்டப்பேரவையில், அம்மா கிளினிக் பணியாளர்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றியவர்களுக்கு மருத்துவத் துறையில் முன்னுரிமை அளித்து பணி வழங்கப்படும்” என்று கூறினார்.
திருமணமான பின் 5 வருடங்களுக்கு பிறகு கொடுப்பது தாலிக்கு தங்கம் திட்டம் கிடையாது – அமைச்சர் எ.வ.வேலு
தாலிக்கு தங்கம் திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “திருமணமான பின் 5 வருடங்களுக்கு பிறகு தங்கம் கொடுப்பது தாலிக்கு தங்கம் திட்டம் கிடையாது” என்று பதிலளித்தார்.
புதிய கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்படவில்லை – ஒ.பி.எஸ் விமர்சனம்
சட்டப்பேரவையில் பேசிய மு.க. ஸ்டாலின், கடந்த இடைக்கால பட்ஜெட்டில் தெரிவித்ததுபோல் மாநில புதிய கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்படவில்லை என்று விமர்சனம் செய்தார். மேலும், பட்ஜெட்டால் ஏழைகளுக்கு எந்த பயனும் இல்லை. பேரிடர் நிவாரண நிதியாக ரூ.6,230 கோடியை மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டது. எவ்வளவு நிவாரணம் பெறப்பட்டது என்பதை நிதியமைச்சர் விளக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-assembly-highlights-on-march-23-cm-mk-stalin-answer-to-ops-that-aiadmk-govt-fame-for-vengeance-429689/