புதன், 23 மார்ச், 2022

ஹிஜாப் சர்ச்சை; மாணவிகளுக்கு மறுதேர்வு கிடையாது: கர்நாடக அரசு

 22 3 2022 

பள்ளிகளில் ஹிஜாப் அணிந்து மாணவிகள் வருவதற்கு கர்நாடக ஐகோர்ட் தடை விதித்துள்ள நிலையில், வகுப்புகளையும், தேர்வுகளை அந்த மாநில முஸ்லிம்கள் மாணவிகள் புறக்கணித்தனர்.

இந்நிலையில், தேர்வுகளை புறக்கணித்த மாணவிகளுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படமாட்டாது என்று கர்நாடக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறினார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
தேர்வுகளில் மாணவிகள் பங்கேற்காமல் போனதற்கு எந்தக் காரணம் வேண்டுமானாலும் இருக்கட்டும். அரசின் உத்தரவு என்ன குறிப்பிடுகிறதோ அதை செய்வோம். எங்களால் மீண்டும் தேர்வை நடத்த முடியாது. கிட்டத்தட்ட 400 முஸ்லிம் மாணவிகள் தேர்வை புறக்கணித்தனர்.

ஹிஜாப் பிரச்சனைக்காகவோ அல்லது வேறு எந்த காரணத்துக்காகவோ தேர்வில் பங்கேற்காமல் இருந்திருந்தால் கூட மறு தேர்வு கிடையாது என்று திட்டவட்டமாக நாகேஷ் தெரிவித்தார்.

முன்னதாக, காவி துண்டையும், ஹிஜாப்பையும் பள்ளிக்கு அணிந்து வரக் கூடாது. பள்ளியில் சீருடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று கர்நாடக ஐகோர்டு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும்பாலான முஸ்லிம் மாணவிகள் செய்முறை தேர்வை புறக்கணித்தனர்.
இதுதொடர்பாக கர்நாடக சட்டத் துறை அமைச்சர் ஜே.சி.மதுஸ்வாமி கூறுகையில், ஐகோர்ட்டின் தீர்ப்பை மீறி எங்களால் எதுவும் செய்ய முடியாது.

அந்த உத்தரவை நாங்கள் பின்பற்றியாக வேண்டும். அதனை எதிர்க்க முடியாது. கோர்ட் தீர்ப்புக்கு முன்பு மாணவிகள் தேர்வுகளை புறக்கணித்திருந்தால் நாங்கள் ஏதாவது உதவி செய்வோம். கோர்ட் தீர்ப்புக்கு பிறகு மாணவிகள் புறக்கணித்திருப்பதால் எங்களால் எதுவும் செய்ய இயலாது என்றார் அவர்.

கேம்பஸ் பிரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பு கூறுகையில், உச்சநீதிமன்றத்தில் ஹிஜாப் வழக்கை விடமாட்டோம். தொடர்ந்து போராடுவோம். கர்நாடகத்தில் ஆளும் பாஜக மாணவர்களை படிக்க ஊக்குவிப்பதில்லை. குறிப்பாக முஸ்லிம் மாணவிகளை படிக்க விடுவதில்லை.

ஐகோர்ட் உத்தரவுக்கு முன்பு 25 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு சென்று பார்த்தோம். கிட்டத்தட்ட 11,000 முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அரசு விதித்த தடையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. நாங்கள் தகவல்களை சேகரித்து வருகிறோம் என்று கூறினர்.

இதனிடையே, கர்நாடகத்தில் பல மாவட்டங்களில் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விஜயநகர ஸ்ரீ கிருஷ்ணதேவராய பல்கலைக்கழக மாணவர்கள் இந்திய எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில், நாங்கள் தேர்வுக்கு சென்றபோது ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டோம். கல்லூரி முதல்வரும் எதுவும் கண்டுகொள்ளவில்லை. இதற்கு முன்பு இப்படி இருந்ததில்லை. நாங்கள் ஏற்கனவே ஹிஜாப் அணிந்து கல்லூரியில் தேர்வு எழுதியிருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகிறோம் என்று கூறினர்.

Written by Darshan Devaiah BP , Kiran Parashar 

source https://tamil.indianexpress.com/india/we-are-being-harassed-at-the-examination-centre-says-karanata-muslim-students-428891/