21 3 2022
கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற சட்டப்பேரவை இன்று மார்ச் 21 கூடியது. அப்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
மேகதாதுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அனுமதி தரவோ கூடாது என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
இந்தத் தீர்மானத்தை அதிமுக ஆதரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேகதாது குறித்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தவர்களுக்கு நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் சட்டப்பூர்வமாக தமிழ்நாடு அரசு எதிர்க்கும் என்றும் அவர் கூறினார்.
மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. சமீபத்தில் கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையின் போது சட்டசபையில் பேசிய அந்த மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட நிதி நிலை அறிக்கையில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்தார்.
மேகதாது அணை கட்ட மத்திய அரசு, கர்நாடக அரசுக்கு எந்தவித ஒப்புதலும் இதுவரை அளிக்காத நிலையில், கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டினால் தமிழக விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவர் என தொடர்ந்து தமிழக அரசும் , அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/a-separate-resolution-passed-unanimously-in-the-assembly-428237/