ஞாயிறு, 20 மார்ச், 2022

தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து? அமைச்சர் மா.சு பதில்

 Ma Subaramanian explanation on changing Marriage gold scheme into education scheme: தாலிக்கு தங்கம் வழங்கும் திருமண நிதியுதவித் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அரசு பள்ளி மாணவிகளின் உயர் கல்விக்கு மாதம் ரூ.1,000 தருவதன் மூலம் தங்கத்தை வைரமாக மாற்றுகிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் 2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். அப்போது சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் குறிப்பிடத்தகுந்ததும், தற்போது பேசு பொருளாகி இருப்பதுமான அறிவிப்பு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நிதியுதவி திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் நேற்றைய அறிவிப்பில், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது. இதன் மூலம் பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க கல்லூரியில் சேர்ந்து அவர்கள் படிப்பு முடியும் வரை மாதம் ரூ.1000 அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவித்தார்.

மேலும், அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் ரூ.1,000 அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவிபெறலாம் இத்திட்டத்தின் மூலம், சுமார் ஆறு லட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளது. இந்தப் புதிய முன்முயற்சிக்காக, வரவு செலவுத் திட்டத்தில் 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் கூறினார்.

இதுவரை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தில் 8 கிராம் தங்கம் மற்றும் திருமண உதவித்தொகையும் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது பட்ஜெட்டில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் பெண்கள் வரை பயன் அடையக்கூடிய தாலிக்கு தங்கம் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்தநிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 தருவதன் மூலம் தங்கத்தை வைரமாக மாற்றுகிறோம் என்று கூறினார்.

அமைச்சர் மா.சுப்ரமணியத்திடம் தாலிக்கு தங்கம் திட்டம் கைவிடப்படுகிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் பயனாளிகளுக்கு தங்கத்தை சரியாக தரவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 4 ஆண்டு காலமாக தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இந்த திட்டத்திற்காக வாங்கிய தங்கத்தை என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லை என கூறியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/ma-subaramanian-explanation-on-changing-marriage-gold-scheme-into-education-scheme-427584/