செவ்வாய், 22 மார்ச், 2022

கொரோனா இதயத்தை எவ்வாறு பாதிக்கிறது?

 21 3 2022 கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பலரும், இதய ரீதியான பிரச்சினையை சந்திப்பதாக புகாரளிக்கின்றனர். இதுதொடர்பான உண்மை நிலையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் டெல்லி எய்ம்ஸ் இருதயவியல் பேராசிரியர் டாக்டர் அம்புஜ் ராய். இவர், கோவிட்-19க்குப் பிந்தைய தொடர்களை நிர்வகிப்பதற்கான தேசிய விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்ட ஆராய்ச்சிக் குழுவுடன் பணியாற்றியவர் ஆவர்.

கொரோனா நோயாளிகள் ஏன் இதய பிரச்சினை சந்திக்கிறார்கள்?

இது புதியது கிடையாது. முந்தைய தொற்று பாதிப்பிலும், இத்தகைய பிரச்சினையை பலர் சந்தித்துள்ளனர். ஸ்பேனிஷ் தொற்றுக்கு பிந்தைய காலத்திலும், அதன் நேரடி தாக்கத்தின் காரணமாக பல இறப்புகள் ஏற்பட்டதை உணர்ந்தோம். அதில் முக்கியமான சிக்கல் இதய பிரச்சினை ஆகும். தொற்று பாதிப்புக்கு பிறகு, இதய நோய் பிரச்சினைகள் அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாகவே, எளிதில் தொற்றால் பாதிக்கப்படக்கூடியவர்களும், இதய நோயாளிகளும் தொற்று தடுப்பூசியை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இதய நோய் அதிக ஆபத்தில் உள்ள நபர்களிடையே வைரஸ் பரவலை தடுக்க விரும்புகிறோம்

இதில், கொரோனா தொற்றும் விதிவிலக்கு அல்ல. கொரோனா வைரஸ் தீவிரத்திலிருந்து மீண்டும் வருபவர்களிடையே, இதய பிரச்சினை ஏற்படுவதை பரவலாக காணமுடிகிறது.

உதாரணமாக, அமெரிக்கா வீரர்களின் டேட்டாபேஸ் மூலம் 1.54 லட்சம் பேருக்கு நடத்தப்பட்ட ஆய்வில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு ஒரு ஆண்டிற்கு பிறகு பெரும்பாலானோருக்கு இதய பிரச்சினை ஏற்படுவது உறுதியாகியுள்ளது. இந்தியாவிலும் அதிகளவிலான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ள நிலையில், இதய பிரச்சினையை சந்திக்க வேண்டிய அபாயம் ஏற்படலாம் என்பது தெரிகிறது.

லேசான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை காட்டிலும், தீவிர தொற்றால் பாதிப்படைந்தவர்களுக்கு தான் இதய பிரச்சினை சந்திக்கிறார்கள். கொரோனா தடுப்பூசி போடும்பட்சத்தில், லேசான பாதிப்பே ஏற்படக்கூடும். எனவே, கொரோனா தடுப்பூசி இதய பிரச்சினை ஏற்படுவதையும் தடுக்கிறது.

இதய பிரச்சினை ஏற்படுவதற்கான அறிகுறிகள்?

இதய பிரச்சினையில் முதல் மாரடைப்பு ஆகும். அவை ஏற்படுகையில், மார்பில் அதிக எடை, வியர்வை, கடுமையான மூச்சுத் திணறல், மேல் மார்பை சுற்றி வலி போன்றவை ஏற்படும்.

இரண்டாவது, அரித்மியா ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த பாதிப்பின்போது, நோயாளிகள் பதற்றமாக உணர்வார்கள். இதயத் துடிப்பு சீரற்றதாகவும், வேகமாகவும் இருக்கும்.

மூன்றாவது, இதய தசைகளை பாதிக்கும். கொரோனாவால் இறந்தவர்களிடம் நடத்தப்பட்ட உடற்கூராய்வில், வைரஸ் தொற்று இதய தசையில் இருப்பது தெரியவந்தது. இந்த வைரஸ், சிலரின் இதயத்தில் வீக்கத்தை ஏற்படுத்தி, தசைகளை பலவீனமாக்கும். இதன் காரணமாக, இதய திசையின் பம்பிங் பிராசஸ் திறன் குறைந்து, சம்பந்தப்பட்ட நபரிடம் மூச்சுத்திணறல் அல்லது உடலில் திரவம் அளவு குறைவதை உணரக்கூடும்.

இறுதி சிக்கலானது, கொரோனாவால் கட்டி உருவாக வாய்ப்புள்ளது. குறிப்பாக, உங்கள் நரம்பு மண்டலங்களில் கட்டி உருவாகுவது, அதிக ஆபத்தை ஏற்படுத்தம். அவை, நுரையீரலுக்குள் நுழைந்தால், உடலுக்கு தேவையான ரத்த விநியோகத்தை நிறுத்தி திடீர் இதய அடைப்புக்கு வழிவகுக்கும்.

எந்த வயதினருக்கு அதிக ஆபத்து?

கொரோனாவின் தீவிர தொற்றால் பாதிக்கப்படைந்தவர்கள் எளிதில் இதய பாதிப்புக்கு ஆளாகுவார்கள். குறிப்பாக, வயதானவர்களும், இணை நோய் உள்ளவர்களும், அதிகளவில் இதய பிரச்சினையை சந்திக்கிறார்கள். ஆனால், இந்தியாவை பொறுத்தவரை, இளைஞர்களே அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், இதய பாதிப்பு ஏற்படும் வயதுபிரிவில் மாற்றம் வரக்கூடும். எனவே, இளைஞர்களிடையே பாதிப்பு தென்பட தொடங்கினால், அதன் தாக்கம் அதிகளவில் இருக்கும்.

இணை நோய் இல்லாதவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவது ஏன்?

தெற்காசிய நாட்டவர்களான நாம் எப்படியும் இதய நோய்க்கு ஆளாகிறோம். வெளிநாட்டில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோர் மீது மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதய நோய்கள் பொதுவாக மேற்கு நாடுகளுடன் ஒப்பிடும்போது தெற்காசியாவில் ஒரு தசாப்தத்திற்கு முன்பே உருவாகின்றன.

இதய நோய் ஏற்பட ஐந்து ஆபத்து காரணிகள் உள்ளன. புகையிலை பயன்பாடு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு, குடும்ப வரலாறு ஆகியவை ஆகும். தற்போது, கொரோனா ஆறாவது ஆபத்து காரணியாக மாறியுள்ளது.

இந்த பிரச்சினையை முன்கூட்டியே கண்டறிவது எப்படி?

முதலில் ஆபத்து காரணிகளில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு நபரும் ஒரு தடுப்பு இதய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இது மிகவும் எளிமையான சோதனை. உங்கள் ரத்த அழுத்தம் அளவு, ரத்த சர்க்கரை அளவு, இரத்த கொழுப்பு அளவு, உங்கள் எடை மற்றும் உணவு முறை செக் செய்யப்படும்.

உயர் இரத்த அழுத்தம் பாதிப்பு கொண்டவர்களில் பாதி பேர் அதனை அறிந்திருக்கவாய்ப்பில்லை. ஏனெனில், அவர்கள் அதனை செக் செய்யவில்லை. உயர் ரத்த அழுத்தம் எவ்வித அறிகுறியும் காட்டாமல் நம்மை இறப்புக்கு அழைத்துச்செல்லும். மக்கள்தொகை அளவைப் பார்த்தால், கிராமப்புறங்களில் 10 சதவீத பேரும், நகர்ப்புறங்களில் 20 சதவீத பேர் மட்டுமே ரத்த அழுத்தம் அளவை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். எனவே அனைவரும் இதய தடுப்பு பரிசோதனைக்கு செல்ல வேண்டும்

ECHO பரிசோதனை, இதய MRI-களை பலர் செய்வதை காணமுடிகிறது. அது தேவையா?

அறிகுறியற்ற நபருக்கு,நிச்சயம் அத்தகைய பரிசோதனை தேவையில்லை. கோவிட்-க்கு பிந்தைய இதய மேலாண்மை குறித்து சுகாதார அமைச்சகத்திற்காக வெளியிட்ட அறிவிப்பில் தெளிவாக உள்ளது. மிக அடிப்படையான சோதனைகளைத் தவிர, அறிகுறிகள் இல்லாவிட்டால் நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள். உதாரணாக, மூச்சு விடுவதில் சிரமம் இன்றி 20 நிமிடம் நன்றாக நடைப்பயிற்சி செய்வது, அன்றாட பணிகளை தொய்வின்றி செய்வது போன்றவை ஆகும். உங்கள் வயது, உடற்தகுதி பொறுத்து முடிந்தவரை நடக்கலாம். நீங்கள் எந்த சோதனைக்கும் செல்ல வேண்டியதில்லை.

ஆனால், படிக்கட்டுகளில் ஏறுகையில் படபடப்பு, மூச்சுத் திணறல் போன்றவற்றை எதிர்கொண்டால், கூடுதல் சோதனை செய்வது நல்லது,

ஜெர்மனி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும், பாதிக்கப்படாதவர்களை வைத்து ஆய்வு நடத்தியது. அதில், இருவரது எம்ஆர்ஐ அளவு ஓரே மாதிரியாக தான் இருந்தது. எனவே, விலை மதிப்பிலான சோதனையில் துல்லியமாக தெரியும் என சொல்வதெல்லாம் கிடையாது. அறிகுறிகள் இல்லாவிட்டால், அடிப்படை சோதனைகளைத் தவிர வேறு எதையும் நீங்கள் செய்ய வேண்டியதில்லை.

எப்போது நிபுணரை அணுக வேண்டும்?

தொற்று பூரணமாக குணமடைந்த நிலைக்கு வந்தும், மூச்சுத் திணறல், படபடப்பு, வேகமான இதயத் துடிப்பு, சீரற்ற இதயத் துடிப்பு, கைகால்களில் வீக்கம், நடைபயிற்சியில் நெஞ்சில் பாரமாக உணர்வது போன்ற அறிகுறிகளில் ஏதெனும் ஒன்று இருந்தாலும், நிபுணரை விரைவில் அணுகுவது சிறந்தது ஆகும்.

அப்படியில்லாமல், வழக்கமான உடல் செயல்பாடுகளை கொண்டிருந்தால், ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை மற்றும் ரத்தக் கொலஸ்ட்ரால் சோதனையைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை. 25 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் இந்த அடிப்படை சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

தடுப்பு நடவடிக்கைகள் என்ன?

தடுப்பு நடவடிக்கையானது,எளிமையான வாழ்க்கை முறையுடன் தொடங்குகிறது. முதலில், புகையிலை பழக்கத்தை முழுமையாக கைவிடவேண்டும். இரண்டாவது, உடல் எடையை நிர்வகிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். மூன்றாவது, தினசரி வாழ்க்கையில் உடற்பயிற்சி மேற்கொள்வது, அதாவது வாரத்தில் 5 முதல் 6 நாள்கள், 20 முதல் 30 நிமிடம் வரை நடைபயிற்சி மேற்கொள்வது போதுமானது.

நான்காவது உணவில் பழங்கள், காய்கறிகள் சேர்த்துக்கொள்வது. சர்க்கரை உணவு, உப்பு, வறுத்த உணவை உட்கொள்வதை குறைக்க வேண்டும். அவ்வப்போது, ஒரு வழக்கமான தடுப்பு இதய பரிசோதனை செய்ய வேண்டும். அவை சீராக இல்லாத பட்சத்தில், நீங்கள் சிகிச்சையை தொடங்க வேண்டும்.

source https://tamil.indianexpress.com/explained/how-covid-affects-the-heart-428157/