எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதா, 2022-ஐ அரசாங்கம் திங்கள்கிழமை மக்களவையில் அறிமுகப்படுத்தியது. விழித்திரை மற்றும் கருவிழி ஸ்கேன் உள்ளிட்ட உடல் மற்றும் உயிரியல் மாதிரிகளை சேகரிக்கவும், சேமித்து வைக்கவும் மற்றும் பகுப்பாய்வு செய்யவும் காவல்துறை மற்றும் சிறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்குவதை இந்த மசோதா முன்மொழிகிறது.
முன்மொழியப்பட்ட சட்டம் என்ன?
மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவால் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதா, 2022, ஆனது சில தனிநபர்கள், குற்றவாளிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆகியோர்களை அவர்களின் தனிப்பட்ட உயிரியல் தரவுகளைப் பகிர கட்டாயப்படுத்துகிறது. எனவே இந்த மசோதா அதிகப்படியான அரசாங்க கண்காணிப்பு மற்றும் தனியுரிமை மீறல் பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளது. மசோதாவின் வாசகத்தின்படி, மசோதாவானது, “குற்றவியல் விஷயங்களில் அடையாளம் காணுதல் மற்றும் விசாரணை நோக்கங்களுக்காக குற்றவாளிகள் மற்றும் பிற நபர்களின் அளவீடுகளை எடுப்பதற்கும், பதிவுகளை பாதுகாக்கவும் மற்றும் அதனுடன் தொடர்புடைய மற்றும் தற்செயலான விஷயங்களுக்கும்” அங்கீகாரம் வழங்குவதாகும்.
மசோதாவின் பிரிவு 2(1)(b) ஆனது விரல் பதிவுகள், உள்ளங்கை-அச்சு பதிவுகள், கால்தடம் பதிவுகள், புகைப்படங்கள், கருவிழி மற்றும் விழித்திரை ஸ்கேன்கள், உடல் மற்றும் உயிரியல் மாதிரிகள் மற்றும் அவற்றின் பகுப்பாய்வு, கையொப்பங்கள் மற்றும் கையெழுத்து உள்ளிட்ட நடத்தை பண்புகளை உள்ளடக்கிய “அளவீடுகள்”, அல்லது குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC), 1973 இன் பிரிவு 53 அல்லது பிரிவு 53A இல் குறிப்பிடப்பட்டுள்ள வேறு ஏதேனும் சோதனைகளை பற்றி குறிப்பிடுகிறது. பிரிவு 53 என்பது கைது செய்யப்பட்ட நபரின் மருத்துவப் பரிசோதனை தொடர்பானது.
கைதிகளை அடையாளம் காணும் சட்டம், 1920 ஐ மாற்றவும் இந்த சட்டம் முயல்கிறது. இந்தச் சட்டம் பெரும்பாலும் குற்றவாளிகள் மற்றும் சிறைத்தண்டனை அனுபவிக்கும் நபர்களுக்கான “அளவீடுகளை” சேகரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. 1920 சட்டத்தின் கீழ் அளவீடுகள் என்பது விரல் பதிவுகள் மற்றும் கால்தட பதிவுகளை மட்டுமே உள்ளடக்கியது.
தற்போதைய சட்டம் யாருக்கு பொருந்தும்?
1920 சட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த மசோதா தனிநபர்களுக்கும் பொருந்துகிறது. மூன்று வகை தனிநபர்களுக்கு சட்டம் பொருந்தும் என்று மசோதா முன்மொழிகிறது:
– தற்போதைக்கு நடைமுறையில் உள்ள எந்தச் சட்டத்தின் கீழும் தண்டனைக்குரிய குற்றத்திற்காகத் தண்டனை பெற்றவர்கள்.
– சட்டப் பிரிவு 107, 108, 109 அல்லது 110 இன் கீழ் நடவடிக்கை எடுப்பதற்காக, நல்ல நடத்தைக்காக அல்லது அமைதியைப் பேணுவதற்காக CrPCயின் பிரிவு 117 இன் கீழ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டவர்கள். இவை குற்றத்தைத் தடுக்கும் நோக்கில் “சந்தேகத்திற்குரிய குற்றவாளிகள்” அல்லது “பழக்கமான குற்றவாளிகள்” சம்பந்தப்பட்ட விதிகளாகும்.
– நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்தின் கீழும் தண்டிக்கப்படக் கூடிய குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அல்லது தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்கள். இதில் தேசிய பாதுகாப்பு சட்டம் அல்லது பொது பாதுகாப்பு சட்டமும் அடங்கும்.
கூடுதலாக, ஒரு பெண் அல்லது குழந்தைக்கு எதிரான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது ஏழாண்டுகளுக்குக் குறையாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் தவிர, வேறு எந்தக் குற்றத்திலும் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மசோதாவின் கீழ் அவரது உயிரியல் மாதிரிகளை எடுக்க அனுமதிக்க மறுக்கலாம் என்று மசோதா கூறுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து அத்தகைய தரவு சேகரிக்கப்பட்டாலும், குற்றஞ்சாட்டப்பட்டவர் விசாரணையின்றி விடுவிக்கப்பட்ட பிறகு அல்லது நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பிறகு அல்லது வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, ஒரு மாஜிஸ்திரேட் எழுத்துப்பூர்வமாக கூறாவிட்டால், அத்தகைய தரவுகள் பதிவுகளிலிருந்து அழிக்கப்படலாம் என்று மசோதா கூறுகிறது.
இந்தத் தரவு எவ்வாறு சேமிக்கப்படும்?
“தற்போதைக்கு நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்தின் கீழும் எந்தவொரு குற்றத்தையும் தடுத்தல், கண்டறிதல், விசாரணை மற்றும் வழக்குத் தொடருதல் ஆகியவற்றின் நலன்களுக்காக” சேகரிக்கப்பட்ட உயிரியல் தரவுகளை தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திடம் (NCRB) ஒப்படைக்க வேண்டும் என்று மசோதா கூறுகிறது.
என்சிஆர்பி, சம்பந்தப்பட்ட மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச நிர்வாகம் அல்லது வேறு ஏதேனும் சட்ட அமலாக்க நிறுவனங்களிடமிருந்து அளவீடுகளின் பதிவை சேகரிக்க முடியும், மேலும் தேசிய அளவில் அளவீடுகளின் பதிவைச் சேமிக்கவும், பாதுகாக்கவும் மற்றும் அழிக்கவும் மற்றும் அத்தகைய பதிவுகளை எந்தவொரு சட்ட அமலாக்க நிறுவனத்துடனும் பகிரவும் பரப்பவும் அதிகாரம் பெற்றிருக்கும். காவல் துறை இன்னும் மாநிலப் பட்டியலில் இருப்பதால், எதேனும் மாநிலங்கள் இந்தத் தகவலைப் பகிர மறுக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். ஆனால், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காவல் துறையினர் கண்காணிப்பை மேற்கொள்வதற்கான சட்டப்பூர்வ கட்டமைப்பை இந்த மசோதா வழங்குகிறது.
இந்தத் தரவைச் சேகரிப்பது, சேமிப்பது அல்லது பயன்படுத்துவது போன்ற முறைகள் அரசாங்கத்தால் விதிகளில் பரிந்துரைக்கப்படும், ஆனால் இவை குறித்து மசோதாவில் குறிப்பிடப்படவில்லை. அதேநேரம், அளவீடுகளின் பதிவேடு சேகரிக்கப்பட்ட நாளிலிருந்து 75 ஆண்டுகளுக்கு டிஜிட்டல் அல்லது மின்னணு வடிவத்தில் சேமிக்கப்படுவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த விதிகள் மாநில சட்டமன்றங்கள் அல்லது பாராளுமன்றத்தில் அவசியம் விவாதத்திற்கு வைக்கப்படும் என்று மசோதா கூறுகிறது.
மசோதா பற்றி எழுப்பப்படும் பிரச்சினைகள் என்ன?
தெளிவின்மை: பல விதிகள் மசோதாவிலேயே வரையறுக்கப்படவில்லை. அடிப்படை உரிமைகளில் தாக்கங்களை ஏற்படுத்தும் சட்டங்கள் குறித்து இது கவலைகளை எழுப்பலாம். உதாரணமாக, மசோதாவின் நோக்கங்கள் பற்றிய அறிக்கையானது “குற்றவாளிகள் மற்றும் பிற நபர்களுக்கான” அளவீடுகளை சேகரிப்பதை குறித்து குறிப்பிடுகிறது, ஆனால் “பிற நபர்கள்” யார் என்பது குறித்து தெளிவாக வரையறுக்கப்படவில்லை. சில குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களும் இதில் அடங்குவர், ஆனால் காவல்துறை அதை மற்றவர்களுக்கு விரிவுபடுத்த சட்டத்தைப் பயன்படுத்தலாம் என்று வாதிடப்படலாம்.
சட்டப் பிரிவு 107, 108, 109 அல்லது 110 இன் கீழ் நடவடிக்கை எடுப்பதற்காக, நல்ல நடத்தைக்காக அல்லது அமைதியைப் பேணுவதற்காக CrPCயின் பிரிவு 117 இன் கீழ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டவர்களை பயோமெடிக் தரவைப் பகிர கட்டாயப்படுத்தப்படுவதை இந்த மசோதா அனுமதிக்கிறது. இந்த விதிகள் தனிநபர்களின் வரம்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இதுவரை எந்தவொரு குற்ற வழக்கும் பதிவு செய்யப்படாதவர்கள், ஆனால் “சந்தேகத்திற்குரியவர்கள்” அல்லது ஒன்றைச் செய்ய “சாத்தியமானவர்களை” இந்த மசோதா உள்ளடக்குகிறது.
அடிப்படை உரிமைகளுடன் மோதல்: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த மசோதா பாராளுமன்றத்தின் சட்டமன்றத் திறனுக்கு அப்பாற்பட்டது என்று வாதிட்டனர், ஏனெனில் அது தனியுரிமைக்கான உரிமை உட்பட குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகிறது. குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் எந்தவொரு சட்டத்தையும் பாராளுமன்றம் கொண்டு வர முடியாது என்று அரசியலமைப்பு கூறுகிறது.
முன்மொழியப்பட்ட சட்டம் அரசியலமைப்பின் 20(3) க்கு எதிராக விவாதிக்கப்படும், இது ஒரு அடிப்படை உரிமையாகும், இந்தச் சட்டப்பிரிவு சுய-குற்றச்சாட்டுக்கு எதிரான உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. “எந்தவொரு குற்றத்திற்காகவும் குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு நபரும் தனக்கு எதிராக சாட்சியாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை” என்று அது கூறுகிறது.
தனியுரிமைக்கான உரிமையை அடிப்படை உரிமையாக அங்கீகரித்த புட்டசாமி எதிர் யூனியன் ஆஃப் இந்தியா வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு, தனியுரிமையை மீறும் எந்தவொரு அரசின் நடவடிக்கையும் சட்டத்தின் மூலம் ஆதரிக்கப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியது. அத்தகைய சட்டங்களை அனுமதிக்க மூன்று மடங்கு சோதனையையும் நீதிமன்றம் வகுத்தது. முதலில், செயல்பாடு ஒரு சட்டத்தால் ஆதரிக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, அடிப்படை உரிமைகளுடன் முரண்படும் அத்தகைய சட்டத்தை கொண்டு வருவதற்கு இந்த விஷயத்தில் அரசுக்கு நியாயமான அக்கறை இருக்க வேண்டும். மூன்றாவதாக, அரசின் மீறல் அதன் நோக்கத்திற்கு சரியானதாக இருக்க வேண்டும்.
முன்மொழியப்பட்ட மசோதா சட்டம் ஒழுங்கை பராமரிக்க உதவுகிறது, எனவே இது ஒரு சட்டபூர்வமான அரசாங்க நலன் என்று அரசாங்கம் வாதிடலாம். இருப்பினும், இந்த மசோதா அதன் நோக்கங்களில் ஒன்றாக “தண்டனை விகிதத்தை அதிகரிப்பது” என்றும் கூறுகிறது. சட்டம் இயற்றப்பட்டு சவால் செய்யப்பட்டால், “தண்டனை விகிதத்தை அதிகரிப்பது” ஒரு நியாயமான நோக்கமாக இருக்க முடியுமா மற்றும் குடிமக்களின் உரிமைகளை விட அது பெரிதாக இருக்க முடியுமா என்பதை நீதிமன்றம் ஆராய வேண்டும்.
முன்மொழியப்பட்ட மசோதா, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலீஸ் கண்காணிப்புக்கான சட்டக் கட்டமைப்பைக் கொண்டுவரும் அளவுக்கு, அது விரிவுபடுத்தப்படலாம் அல்லது தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
மற்ற கவலைகள்: கைதிகளின் உரிமைகள் மற்றும் பயோமெட்ரிக் தரவுகளை 75 ஆண்டுகள் சேமித்து வைக்கும் உரிமையை இந்த மசோதா கொண்டு வருகிறது. இந்தியாவில் மறக்கப்படுவதற்கான உரிமையைச் சுற்றியுள்ள நீதித்துறை செயல்பாடுகள் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும்போது, புட்டசாமி தீர்ப்பு தனியுரிமைக்கான அடிப்படை உரிமையின் ஒரு அம்சமாக விவாதிக்கிறது.
2018 ஆம் ஆண்டு புட்டசாமி II வழக்கில், உச்சநீதிமன்றம் ஆதார் திட்டத்தை உறுதிசெய்தது மற்றும் நலத் திட்டங்களுக்காக கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன் சேகரிக்க அரசாங்கத்தை அனுமதித்தது.
source https://tamil.indianexpress.com/explained/explained-bio-samples-for-crime-files-432327/