காடுகளை பாதுகாக்க வேண்டும் என்று பல தரப்பு மக்களும் கோரிக்கைகள் வைத்து வருகின்ற இந்த சூழலில் 5 ஏக்கருக்கும் குறைவாக உள்ள தனியார் காடுகளில். தமிழ்நாடு தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் 1949-த்தின் விதிகளுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக வனத்துறை அமைச்சர் அதிகாரிகளிடம் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் 5 ஏக்கருக்கும் குறைவான அளவு தனியார் காடுகளில் இருக்கும் மரங்கள் வெட்டப்படும் சூழல் உருவாகி உள்ளதாக தி இந்து நாளிதழ் இன்று வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
தனியார் நிலங்களில் அமைந்திருக்கும் காடுகளை வெட்டுவதை தடுக்கும் நோக்கில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டத்தின் கீழ் அதிக முக்கியத்துவம் தர வேண்டிய அவசியம் இல்லாத “தேயிலை தோட்டங்களும், சில்வர் ஓக் மரங்களும்” இடம் பெற்றிருக்க, முக்கியமான ஈர நிலங்களாக கருதப்படும் நீலகிரியில் “வயல்கள்” போன்றவை புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்று ஏற்கனவே இயற்கை நல ஆர்வலர்கள் தங்களின் வெளிப்படுத்தி வருகின்றனர். கூடலூர் பகுதியில் இருக்கும் வயல்கள் என்று அழைக்கப்ப்படும் ஈரநிலங்கள் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படாத நிலையில், வயல்களில் மேம்பாட்டுத் திட்டங்கள் பலவற்றையும் நிறைவேற்றி வருகின்றனர் மக்கள். ஈரநில சூழல்களுக்கு அதிக அளவில் இவை அபாயங்களை ஏற்படுத்தக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கும் பட்சத்தில் காடுகளின் பரப்பு குறைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் கீழ் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் பெரும்பாலானவை நீலகிரியில் சுற்றுச்சூழல் உணர் மண்டலங்களாக இருக்கின்றன. எனவே இதில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் பாரம்பரிய யானைகள் வலசை பாதைகளில் அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.
5 ஏக்கருக்கும் குறைவான காடுகளில் விதிமுறை தளர்வு எனபதை காப்புக் காடுகள் மற்றும் உணர் மண்டலங்களுக்கு வெளியே நடைமுறைப்படுத்தலாம். சிக்கல் ஏதும் ஏற்படாது. ஆனால் காப்புக் காடுகளுக்குள் இதனை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் இதனை சார்ந்து இருக்கும் உயிரினங்களும் அதிக அளவில் பாதிக்கப்படும். நிலத்தின் உரிமையாளர்கள் தங்களின் நிலத்தை எளிதில் பிரித்து ஐந்து ஏக்கருக்கும் குறைவாக உள்ள நிலங்களில் தாரளமாக மரங்களை வெட்டும் முயற்சியில் இறங்குவார்கள் என்றும் தங்களின் வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.
source https://tamil.indianexpress.com/science/state-government-trying-to-ease-the-restrictions-in-private-forests-432471/