செவ்வாய், 22 மார்ச், 2022

பெகாசஸ் உளவு சர்ச்சை: சந்திரபாபு நாயுடுவை விசாரிக்க ஆந்திர சட்டமன்றம் தீர்மானம்

 Resolution passed in Assembly: Andhra panel to probe if Naidu govt used Pegasus: இஸ்ரேலின் சர்ச்சைக்குரிய ஸ்பைவேரான பெகாசஸை, முந்தைய தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) அரசு வாங்கி பயன்படுத்தியதா என்பதைக் கண்டறிய ஒரு குழுவை அமைக்க ஆந்திர சட்டசபை திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.

4-5 ஆண்டுகளுக்கு முன்பு பெகாசஸ் மென்பொருளை வாங்குவதற்கான வாய்ப்பை தனது அரசாங்கம் நிராகரித்த நிலையில், அப்போது இந்த மென்பொருள் ஆந்திரப் பிரதேச அரசால் வாங்கப்பட்டது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த வாரம் கூறியதை கவனத்தில் கொண்டதாக ஆளும் YSRCP சபையில் தெரிவித்ததால் இந்த தீர்மானம் வந்தது. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அப்போது முதல்வராக இருந்தார்.

நிதியமைச்சர் பி ராஜேந்திரநாத், சந்திரபாபு நாயுடு அரசாங்கம் ஸ்பைவேரை வாங்கிப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது “மிகவும் சாத்தியம்” என்று சபையில் தெரிவித்தார்.

“மூத்த தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி வெறுமனே அப்படிச் சொல்ல மாட்டார்கள்,” என்று ராஜேந்திரநாத் திங்கள்கிழமை சட்டமன்றத்தில் கூறினார்.

“சந்திரபாபு நாயுடு தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக அனைத்து வகையான தந்திரங்களையும் பயன்படுத்தினார். ஆந்திராவின் 5 கோடி மக்களைக் கண்காணிக்க ஸ்பைவேர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இதுபோன்ற தவறான மற்றும் சட்ட விரோதமான வேலைகள் சட்டவிரோதமாகச் செய்யப்படுவதாலும், எந்த ஆதாரத்தையும் விட்டு வைக்காமல் மூடிமறைக்கப்படுவதாலும், எங்களால் தற்போது எந்த ஆதாரத்தையும் முன்வைக்க முடியவில்லை. சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு வாக்காளர்களும் கண்காணிப்பில் இருந்ததாக நாங்கள் கருதுகிறோம்.” என்றும் ராஜேந்திரநாத் கூறினார்.

இந்த குற்றச்சாட்டுகளை தெலுங்கு தேசம் கட்சி நிராகரித்தது. சந்திரபாபு நாயுடுவின் மகனும், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான நாரா லோகேஷ், பெகாசஸ் ஸ்பைவேர் அப்போதைய ஆந்திர அரசிடம் விற்பனைக்கு வந்தது “ஆனால் நாங்கள் அதை நிராகரித்தோம்” என்றார்.

“அரசாங்கம் ஸ்பைவேரை வாங்கியிருந்தால், அதன் பதிவு இருக்கும்,” என்று நாரா லோகேஷ் கூறினார். மேலும், “அப்படி ஏதாவது இருந்திருந்தால், (YSRCP தலைவரும் தற்போதைய முதல்வருமான) ஜெகன் ஆட்சியில் எங்களை சும்மா விடுவார்களா? கடந்த மூன்று ஆண்டுகளில், அவர்கள் எங்களை ஏதாவது ஒரு விஷயத்தில் கவிழ்க்க ஒவ்வொரு தந்திரத்தையும் முயற்சித்தார்கள், ஆனால் நாங்கள் எந்தத் தவறும் செய்யாததால் தோல்வியடைந்தனர் என்றும் அவர் கூறினார்.

தந்தையின் அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த லோகேஷ், சட்டவிரோத தொலைபேசி ஒட்டுக்கேட்டல் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து, மம்தா பானர்ஜியின் கருத்துக்கள் “தவறான தகவல்” என்று கூறினார்.

மேலும், இதுபோன்ற செயல்களில் நாங்கள் ஈடுபட்டிருந்தால், 2019ல் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார் என்றும் லோகேஷ் கூறினார்.

“அவர் (மம்தா) உண்மையில் அப்படிச் சொன்னாரா, எங்கு, எந்தச் சூழலில்… என எனக்கு தெரியவில்லை. அவர் அப்படிச் சொல்லியிருந்தால், அவர் தவறாக கூறுகிறார்.” என்று லோகேஷ் கூறினார்.

இதற்கிடையில், திங்கள்கிழமை சட்டசபையில், தெலுங்கு தேசம் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் தேர்தலில் போட்டியிட முடியுமா என்று நீர்வளத்துறை அமைச்சர் பி அனில் குமார் கேட்டதற்கு, ஒய்எஸ்ஆர்சிபி மற்றும் டிடிபி எம்எல்ஏக்கள் சரமாரியாக வாக்குவாதம் செய்தனர்.

தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏக்கள், தங்கள் பங்கிற்கு, “தீங்கு விளைவிக்கும்”, மலிவான மதுபானங்களை விற்பனை செய்வதை நிறுத்துமாறு கேட்டு ஆளும் கட்சியை குறை கூறினர்.

கடந்த இரண்டு நாட்களாக, உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் விலையில்லா மதுபான பிராண்டுகளை விற்பனை செய்வதாகவும், மாநிலத்தில் குறைந்தது 26 பேர் கள்ளச்சாராயம் குடித்ததால் இறந்ததாகவும் குற்றம்சாட்டி தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை நடவடிக்கைகளை முடக்கினர்.

source https://tamil.indianexpress.com/india/resolution-passed-in-assembly-andhra-panel-to-probe-if-naidu-govt-used-pegasus-428568/