30 3 2022
நாடு முழுவதும் பாஜக ஆளாத மாநில முதலமைச்சர்களை ஒருங்கிணைக்கும் ஜனநாயக யுத்தத்தை முன்னெடுப்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின் மேடையில் பேசிய சீதாராம் யெச்சூரி, பாஜக அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு செயல்படும் விதம் இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் உள்ளதாக கூறினார். மேலும், பாஜக ஆளாத மாநில முதலமைச்சர்களை ஒருங்கிணைக்கும் ஜனநாயக யுத்தத்தில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளதாகவும், அதனை முன்னெடுப்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “பாஜக அரசுக்கு எதிராக தமிழக அரசு செயல்படும் விதம் இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் உள்ளன, இந்த விஷயத்தில் இந்தியாவிற்கு தமிழகம் முன்னோடியாக உள்ளது, முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து, பாஜக அல்லாத மாநில முதல்வர்களை அழைத்து கூட்டம் நடத்த ஏற்கனவே வேண்டுகோள் விடுத்து இருந்தேன், தற்போது மீண்டும் மக்களின் சார்பாக அதை மீண்டும் வலியுறுத்துகிறேன், பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் கூட்டத்தை உடனே கூட்டுங்கள், அதில் தமிழகத்தின் நலன் மட்டுமல்ல இந்தியாவின் நலனே உள்ளது.” என அவர் காட்டமாக பேசினார்.
மேலும், “தமிழகத்தில் கடந்த தேர்தல்களில் பாஜகவுக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்று சேர்ந்து பாஜக – அதிமுக கூட்டணிக்கு வீழ்ச்சியை தந்தார்கள், அதே போன்று நாடு முழுவதும் பாஜகவிற்கு எதிரான ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்ட வேண்டும், அப்படிப்பட்ட அணி சேர்க்கை மாற்று சக்தியாக உருவாகும், 2024 – ல் ஜனநாயக ஆட்சி மலரும்” என அவர் கூறினார்.
source https://news7tamil.live/chief-minister-plays-key-role-in-war-against-bjp.html