புதன், 23 மார்ச், 2022

சட்டசபை ஹைலைட்ஸ் 22 3 2022

 22 3 2022 

தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 18-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-2023-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, மார்ச் 19-ம் தேதி 2022-2023-க்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மார்ச் 21, 22 தேதிகளில் பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 23-ம் தேதியும் தொடர்ந்து நடைபெற உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை மீதான 2வது நாள் விவாதம் நடைபெற்றது.

இன்றைய சட்டப் பேரவை நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் முதலமைச்சர் பதில் அளித்தனர். அதுமட்டுமல்லாமல், சட்டமன்ற வரலாற்றில் சபாநாயகருக்கு முதல் பெண் துபாஷ் நியமனம் செய்யப்பட்டது கவனம் பெற்றுள்ளது.

முதல் பெண் துபாஷ்

தமிழ்நாடு சட்டப்பேரவையில், துபாஷ் என்ற பணிக்கு சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் ஊழியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துபாஷ் என்ற பொறுப்பு சட்டமன்ற வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் இருந்து சட்டமன்றம் வரை சபாநாயகர் செல்லும் போது முன்னே செல்வார். சபாநாயகர் பேரவையில் இருக்கும்போது பேரவைக்கு வெளியில் காத்திருப்பார். மீண்டும் சபாநாயகர் அவர் அறைக்குச் செல்லும்போது உடன் செல்வார்.

இந்த துபாஷ் பணிக்கு ராஜலட்சுமி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1990-ம் ஆண்டு சட்டமன்ற அலுவலகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்தவர். தற்போது 60 வயது எட்டியுள்ள ராஜலட்சுமி வருகிற மே மாதம் ஓய்வு பெற உள்ளார்.

இந்த நிலையில், ராஜலட்சுமி சபாநாயகரின் துபாஷ் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் முதல் பெண் துபாஷ் ஆகியுள்ளார். இதற்கு முன் இந்த பொறுப்பில் ஆண்களே இருந்து வந்தனர். முதல்முறையாக பெண் ஒருவர் இந்த பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

துபாஷ் பொறுப்பிற்கு தனி சீருடையும் வழங்கப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து இந்த பொறுப்பு இருந்து வந்தாலும், இந்த பொறுப்புக்கு முதல்முறையாக திமுக ஆட்சியில் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று சட்டப்பேரவை தொடங்குவதற்கு முன்பு, ராஜலட்சுமி துபாஷ் சீருடை அணிந்து சபாநாயகரை அழைத்து வந்தார்.

நம்ம ராஜுக்குதான் சந்தோஷம் இல்லைனு நினைக்கிறேன் – அமைச்சர் ராஜ கண்ணப்பன் கமெண்ட்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்ச்சியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு பேசினார். கேள்வி நேரத்தின்போது, அதிமுக எம்.எல்.ஏ செல்லூர் ராஜு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் கேள்வி எழுப்பி பேசியதாவது: “பேரவைத் தலைவருக்கு கோடான கோடி நன்றி, இத்தனை நாளா கேட்டு இன்னைக்குதான் வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள். அதற்கு நன்றி நன்றி… பேரவைத் தலைவர் வாயிலாக போக்குவரத்து துறை அமைச்சர் இடத்தில், மக்களின் கோரிக்கை, பெண்களின் கோரிக்கை, பெண்கள் எல்லாம் பேருந்துகளில் இலவச பயணம் என்று சொன்னவுடன் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். இப்போது என்னவென்றால், குறிப்பிட்ட பேருந்துகளில்தான் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய முடியும் என்கிறபோது அவர்கள் உரிய நேரத்துக்கு போக முடியவில்லை. அதனால், அவர்கள் ஷேர் ஆட்டோவில் பயணப்படுகிறார்கள். மக்கள் கஷ்டப்படுகிறார்கள். பெண்களுடைய குரலாக நான் இந்த நேரத்தில் ஒலிக்கிறேன் என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, எந்த இடத்தில் என்று குறிப்பிட்டு சொலுங்கள், குறிப்பிட்டு ஒரு இடத்தில் கேளுங்கள், பொத்தாம் பொதுவாக சொல்லாதீர்கள் என்று கூறினார்.

இதற்கு செல்லூர் ராஜு, மதுரை மாநகரில், இயங்குகிற எல்லா பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் என்று இருந்தால் பரவாயில்லை, குறிப்பிட்ட பேருந்துகளில்தான் ஏற முடியும் என்று சொல்கிறார்கள். இதனால், அந்தப் பெண்களுக்கு மிகப்பெரிய தொந்தரவு, சில பேர் உரிய நேரத்தில் போக முடியவில்லை. மதுரை மாநகரில் மகளிருக்கு மட்டும் என்று பேருந்துகளை இலவசமாக இயக்குகிறார்கள். மற்ற பேருந்துகளில் ஏற்றுவது இல்லை. அதனால், எல்லா பேருந்துகளிலும் பெண்களை இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கிறார்களா என்று பேரவைத் தலைவர் வாயிலாக போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் கேட்கிறேன் என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், “தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, மாநகர பேருந்துகளில் 40 சதவீதம் என்று வைத்தோம். ஆனால், இப்போது 61.82 சதவீதம் என்று கூடிவிட்டது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் பார்த்தீர்கள் என்றால், பெண்கள்தான் 48%க்கு மேல் இருக்கிறார்கள். அவர்களுக்கு 90% பேர் வாக்களித்துள்ளார்கள். அதனால், மகளிர் பேருந்து என்பது முதலமைச்சரின் கனவு திட்டம். அந்த கனவு திட்டம் மிக வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. முதலில் 1,350 கோடி ரூபாய் ஒதுக்கிய அரசு, இந்த முறை 1,510 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறது. ஆகவே, அரசுப் பேருந்துகளில் மகளிர் பயணம் என்பது மிக திருப்தியாக தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. அப்படி ஏதாவது குற்றச்சாட்டுகள் வந்தால், அந்த பேருந்துகளைத் தவிர வேறு மற்ற எல்லா பேருந்துகளையும் இலவசமாக விட்டால் பிறகு எல்லா பேருந்துகளிலும் ஏறிக்கொண்டிருப்பார்கள். பிறகு எப்படி பஸ் கம்பெனியை நடத்துவது. ஏற்கெனவே ரூ.48,000 கோடி நட்டத்தில் போய்க்கொண்டிருக்கிறது. ஆகவே, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து என்ன தேர்தல் அறிக்கையில் சொன்னோமோ அது நடந்துகொண்டிருக்கிறது. மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். நம்முடைய உறுப்பினர் ராஜு அவர்கள்தான் சந்தோஷமாக இல்லை என்று நினைக்கிறேன்.

முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்

திமுக அரசின் பட்ஜெட்டை வரவேற்ற அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி கூறினார்.

இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “முன்னாள் சபாநாயகர் தனபால், பட்ஜெட்டில் பல திட்டங்களை வரவேற்றுள்ளார். அதற்கு நன்றி; அதில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியதற்கும் நன்றி. அவர் கூறிய கருத்துக்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார், திமுக ஆட்சிகு வந்தால் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, திமுக ஆட்சியில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியதே திமுக அரசுதான். அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதிதான் மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கினார். அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசுதான் மக்கள் நலப் பணியாளர்களின் வேலையைப் பறித்து வீட்டுக்கு அனுப்பியது. அதை எதிர்த்து மக்கள் நலப் பணியாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால், நீதிமன்ற தீர்ப்பு வரும்பட்சத்தில் அவர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பதில் எந்தவித தயக்கமும் இல்லை” என்று கூறினார்.

இதனிடையே சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.

10 ஆண்டு ஆட்சியில் அதிமுக, தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியதா? ஸ்டாலின் கேள்வி

திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற விமர்சனத்துக்கு பதிலளித்த மு.க. ஸ்டாலின், “10 வருடம் ஆட்சியில் இருந்த அதிமுக, தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியதா? 10 மாத ஆட்சி காலத்தில் திமுக செய்த சாதனையை எந்த ஆட்சியும் செய்யவில்லை. திமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்” என்று கூறினார்.

பட்ஜெட் விவாதத்தைக் காண வந்த பள்ளி மாணவர்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தைக் காண நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் இன்று சட்டமன்றத்திற்கு வந்தனர்.

source