20 3 2022 Whole sale Diesel purchase price increased Rs.25: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்து வரும் நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் உள்பட மொத்தமாக வாங்குபவர்களுக்கு டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சில்லறை விலையில், கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சுட்டிக்காட்டி எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலையை உயர்த்தியுள்ளன. இருப்பினும் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலை கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மாற்றம் இல்லாமல் தொடர்கிறது.
இந்தநிலையில் மொத்தமாக வாங்குவோருக்கு மட்டும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெட்ரோல் சில்லரை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதனிடையே இந்த விலை அதிகரிப்பால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு நாள்தோறும் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசுப் போக்குவரத்து கழகம் மட்டுமின்றி தொழிற்சாலைகள் மற்றும் பெரு நிறுவனங்களும் மொத்தமாக டீசல் வாங்குகின்றன. அவர்களுக்கும் இந்த விலை உயர்வு கூடுதல் சுமையை கொடுக்கும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் நாள்தோறும் 15 முதல் 16 லட்சம் லிட்டர் டீசல் கொள்முதல் செய்து வருகிறது. தற்போதுள்ள விலை உயர்வால் பல கோடி இழப்பு ஏற்படும்.
இதனிடையே, விலை உயர்வு தொடர்பாக, சில்லறை விலையில் டீசல் வாங்க எண்ணெய் நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சில்லறை விற்பனை விலையை விட லிட்டருக்கு 64 காசு குறைவாக டீசல் வழங்க எண்ணெய் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் நாள்தோறும் ரூ.3.5 கோடி இழப்பு தவிர்க்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/whole-sale-diesel-purchase-price-increased-rs-25-428048/