28 3 2022
மத்திய தொழிற்சங்கங்கள் சம்மேளனங்கள் சார்பில் இன்றும், நாளையும் நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
இதனையொட்டி தமிழகம் முழுவதும் பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது என்று அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்புகள் தெரிவித்துள்ளன.
சென்னையில் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் சட்டங்கள் (லேபர் கோட்ஸ்) என்ற பெயரில் தொழிலாளர் நலச் சட்டங்களை தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றியதை ரத்துசெய்ய வேண்டும், எவ்விதத்திலும் தனியார்மயத்தை அனுமதிக்க மாட்டோம்.
பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரியைக் கணிசமாகக் குறைத்திட வேண்டும் என்பது போன்ற 12 கோரிக்கைகளை வலியுறுத்தி தொழில்சங்கங்கள் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
பொதுத் துறை வங்கி ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் உள்பட 20 கோடி பேர் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்திலும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பணிக்கு வராவிட்டால் இன்றைய நாளுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று மத்திய-மாநில அரசுகள் எச்சரிக்கை விடுத்தன.
இருப்பினும், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை பல்வேறு பணிமனைகள் மூலமாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படுகின்றன.
ஆனால், இன்றைய தினம் குறைவான எண்ணிக்கையிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
12 அம்ச கோரிக்கை பின்வருமாறு:
- தொழிலாளர் சட்டங்கள் (லேபர் கோட்ஸ்) என்ற பெயரில் தொழிலாளர் நலச் சட்டங்களை தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றியதை ரத்துசெய். அதேபோன்று அத்தியாவசிய பாதுகாப்புப் பணிகள் சட்டத்தையும் (EDSA – Essential Defence Services Act) ரத்து செய்க.
- வேளாண் சட்டங்களை ரத்து செய்தபோதிலும், சம்யுக்த கிசான் மோர்ச்சா முன்வைத்துள்ள இதர ஆறு கோரிக்கைகளையும் நிறைவேற்றுக.
- எவ்விதத்திலும் தனியார்மயத்தை அனுமதியோம். தேசியப் பணமாக்கும் திட்டத்தை ரத்துசெய்க.
- அங்கன்வாடி,‘ஆஷா’ ஊழியர்கள், மதிய உணவு ஊழியர்களுக்கும் இதரத் திட்ட ஊழியர்களுக் கும் குறைந்தபட்ச ஊதியத்துடன் காலமுறை ஊதியம் வழங்குக.
- முறைசாராத் தொழிலாளர்கள் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைக் கொண்டுவருக.
- வருமானவரி செலுத்தாத அனைத்துக் குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் 7,500 ரூபாய் உணவு மற்றும் வருமான ஈடாக அளித்திடுக.
- மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின்கீழ் ஒதுக்கீட்டை அதிகப்படுத்து, இதனை நகர்ப்புறங்களுக்கும் விரிவாக்கிடுக.
- கொரோனா வைரஸ் தொற்றின்போது பணியாற்றிய முன்னணித் தொழிலாளர்கள் அனைவருக்கும் முறையான பாதுகாப்பு மற்றும் இன்சூரன்ஸ் வசதிகளை அளித்திடுக.
- வேளாண்மை, கல்வி, சுகாதாரம் மற்றும் முக்கியமான பொதுப் பணிகளில் பொது முதலீட்டை அதிகரித்திடு. பணக்காரர்கள் மீது செல்வ வரி விதித்திடு. இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டமைத்திடுக.
- பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரியைக் கணிசமாகக் குறைத்திடு. விலைவாசியைக் கட்டுப்படுத்திட உருப்படியான நடவடிக்கைகள் எடுத்திடுக.
- ஒப்பந்த ஊழியர்கள், திட்ட ஊழியர்கள் அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடுக.
- தேசியப் பணமாக்குத் திட்டத்தை ரத்து செய். அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவா. ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழான குறைந்தபட்ச ஓய்வூதியத்தில் கணிசமான குறைந்தபட்ச ஓய்வூதியம் அளித்திடுக.
இவ்வாறு தொழிற்சங்கங்கள் 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. - source https://tamil.indianexpress.com/tamilnadu/strike-in-chennai-no-busses-general-public-faces-difficulties-431665/