5 12 2022
இந்தியா ஜி20-க்கு தலைமை ஏற்றுள்ள நிலையில், தமிழ்நாடு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்கும் என ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.
உலகின் சக்திவாய்ந்த பொருளாதார நாடுகள் அடங்கிய ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்த ஜி20 அமைப்பின் உச்சி மாநாட்டை நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் டெல்லியில் திங்கட்கிழமை நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், பிரகாலத் தோஷி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் 40 கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் நடைபெற உள்ள ஜி20 துணை மாநாட்டின் சாராம்சங்கள் குறித்து அனைத்துக்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியதாவது,
2023ஆம் ஆண்டுக்கான ஜி20 தலைமையை இந்தியா ஏற்றிருக்கும் வேளையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு முதற்கண் எனது பாராட்டுகள். இது நம் நாட்டுக்கு மிகவும் பெருமை தரக்கூடிய ஒன்றாகும். உலக அளவில் பல்வேறு நாடுகளிடையே புரிதலை மேம்படுத்துவதில் நாம் மிக முக்கியமான பங்கை ஆற்ற வேண்டியுள்ளது.
ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில், தமிழ்நாடு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்கும். இந்தியாவில் நடைபெற உள்ள ஜி20 கருத்தரங்குக்கு தமிழ்நாடு முழு ஆதரவளிக்கும். உலக அளவில் இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களை காக்க தமிழகம் உறுதுணையாக இருக்கும். இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவோம்.
ஜி20 நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகளே இந்தியாவை உற்றுநோக்குகின்றன. அகிம்சை, சமத்துவம், நல்லிணக்கம், சமத்துவம் உள்ளிட்டவைகளை உலக அளவில் கொண்டு செல்ல இந்த வாய்ப்பை பிரதமர் பயன்படுத்திக் கொள்வார் என நம்புகிறேன்.
காலநிலை மாற்றத்தை தடுக்க இந்திய அரசின் இலக்குகளை எட்ட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இயற்கை பாதுகாப்பு காலநிலை மாற்றத்தை கையாள தமிழ்நாடு ‘பசுமை காலநிலை நிறுவனத்தை’ உருவாக்கி உள்ளோம்.
இவ்வாறு, ஜி20 தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-cm-stalin-g20-advisory-meeting-speech-553404/