திங்கள், 5 டிசம்பர், 2022

சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதே நடைமுறை – அமைச்சர் ரகுபதி

 

அரசாங்கம் இயற்றக்கூடிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதுதான் நடைமுறை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் மனிதநேய உதய நாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மறைந்த பிரியா நினைவு சுழற்கோப்பை மகளிர் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. இதில் 6 மாநிலங்களை சேர்ந்த 15 அணிகள் பங்கேற்றன.

இந்த போட்டியினை மறைந்த பிரியாவின் தாயார் துவக்கி வைத்தார். இதில், பெங்களூர் அணி முதல் இடத்தையும், தமிழ்நாடு மகளிர் காவல்துறை இரண்டாம் இடத்தையும், தமிழகத்தை சேர்ந்த SDAT அணி மூன்றாம் இடத்தையும் பெற்றது. தொடர்ந்து, வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, மறைந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் நினைவாக ஆண்டுதோறும் இதுபோன்று போட்டிகள் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக ஆளுநர் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் ஒப்புதல் வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அரசாங்கம் இயற்றக்கூடிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதுதான் நடைமுறை என்றும் குறிப்பிட்டார்.

source https://news7tamil.live/the-procedure-is-for-the-governor-to-give-assent-to-the-bills-minister-raghupathi.html