செவ்வாய், 13 டிசம்பர், 2022

பிர்பும் வன்முறை முக்கிய நபர் சி.பி.ஐ காவலில் தற்கொலை:

 13 12 2022

source https://tamil.indianexpress.com/india/birbhum-violence-key-accused-ends-life-in-cbi-custody-kin-allege-murder-557502/


பிர்பும் வன்முறை முக்கிய நபர் சி.பி.ஐ காவலில் தற்கொலை: உறவினர்கள் கொலை குற்றச்சாட்டு
மேற்கு வங்க மாநிலம், பிர்பூம் மாவட்டம், போக்டுய் கிராமத்தில் மார்ச் 21 வன்முறையின் போது தீ வைக்கப்பட்ட வீடு

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள போக்டுய் கிராமத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதம் 10 பேர் கொல்லப்பட்ட வன்முறை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஒருவர் நேற்று (திங்கள்கிழமை) மாலை சி.பி.ஐ காவலில் உயிரிழந்தார்.

டிசம்பர் 4-ம் தேதி ஜார்க்கண்டில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட லாலன் ஷேக், மாவட்டத்தின் ராம்பூர்ஹாட் அலுவலகத்தில் உள்ள கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

ஷேக்கின் உறவினர்கள் அவர் காவலில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டுகின்றனர். அவரது மரணம் குறித்து கேள்விப்பட்டதும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ராம்பூர்ஹாட் மருத்துவக் கல்லூரியில் குவிந்தனர். ஷேக்கின் மரணத்திற்கு காரணமான அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மாலை 4:50 மணிக்கு ஷேக் உயிரிழந்ததாகவும், இது குறித்து மாவட்ட காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

அவர் கொலை செய்யப்பட்டதாக லாலனின் மனைவி குற்றஞ்சாட்டினார். மேலும் அவரது உறவினர் சம்சுனஹர் பீபி கூறுகையில், “லாலன் சி.பி.ஐ அதிகாரிகளால் நிற்க கூட முடியாத அளவுக்கு கடுமையாக தாக்கப்பட்டார். அவரை தண்ணீர் குடிக்க கூட அனுமதிக்கவில்லை. அவரது கொலைக்கு காரணமான அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்” என்று கூறினார்.

டிசம்பர் 4-ம் தேதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, லாலன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 6 நாட்கள் சி.பி.ஐ காவல் வழங்கி உத்தரவிட்டப்பட்டது. அவர் மீண்டும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட இருந்தார் எனத் தெரிகிறது. இது தொடர்பாக சி.பி.ஐ இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.

பிர்பும் வன்முறை

இந்தாண்டு மார்ச் 21 அன்று, ஆளும் திரிணாமுல் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பர்ஷால் கிராம பஞ்சாயத்தின் துணைத் தலைவர் பாது ஷேக் கிராமத்திற்கு அருகே வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து போக்டுயில் வன்முறை வெடித்தது. இந்த வழக்கில் சிபிஐயின் குற்றப்பத்திரிகையின்படி, உள்ளூர் டிஎம்சி தலைவர் அனருல் ஹொசைன் இதை தூண்டியதாகவும், திட்டமிட்டு பல வீடுகளுக்கு தீ வைத்ததாவும், பழிவாங்கும் நடவடிக்கையில் செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. வன்முறையில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதில் 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

லாலன், உயிரிழந்த பாது ஷேக்கின் நெருங்கிய உதவியாளர் என்று கூறப்படுகிறது. இது குறித்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் பாது ஷேக்கின் கொலை மற்றும் போக்டுய் வன்முறை என இரண்டு வழக்கு தொடர்பாகவும் சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட்டதையடுத்து மார்ச் 25 அன்று சி.பி.ஐ 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது.

லாலன் ஷேக் மரணம் – பா.ஜ.க மீது குற்றச்சாட்டு

லாலனின் மரணத்தில் பா.ஜ.கவின் தலையீட்டை சுட்டிக்காட்டி, டிஎம்சி செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், “(எதிர்க்கட்சித் தலைவர்) சுவேந்து அதிகாரி முன்பு டிசம்பர் 12-ம் ஒன்று குறிப்பிட்டார். அவர் பேசிய வெடிகுண்டு இதுதானா? யார் எப்போது விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்பதை பாஜக தலைவர்கள்தான் கணிக்கிறார்கள்.

சிபிஐ மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருந்தாலும், அந்த ஏஜென்சியை பாஜக பயன்படுத்துவதால் கேள்விகள் எழுப்பப்படும். லாலன் மரணம் தொடர்பாக முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்,” என்றார்.

பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹா ​​கூறுகையில், “இந்த சம்பவம் தற்கொலையா அல்லது சதியா என்பதை விசாரிக்க வேண்டும். இறுதியில், லாலன் ஷேக்கின் மரணத்தால் அரசியல் ரீதியாக பலன் பெறுவது திரிணாமுல் காங்கிரஸ் தான்” என்றார்.