ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் செய்வது அநியாயம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு விசுவகர்ம சமுதாய மேம்பாட்டு ஆர்வலர்கள் சார்பில் நடைபெற்ற தன்மான நாள் விழா நிகழ்ச்சியில் சதுப்பேரி பண்டித மார்க்கசகாய ஆச்சாரியார் குறித்த நூலை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “சமநிலையற்ற, சமூகநீதியற்ற தமிழகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். இட ஒதுக்கீட்டை யார், யாருக்கு ஒதுக்குவது? இடஒதுக்கீடு என சொல்லக்கூடாது. இடபங்கீடு என்றுதான் சொல்ல வேண்டும். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பின், விசுவகர்ம சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கும் அவல நிலையில் உள்ளோம்.
அருந்ததியர் சமூகத்திற்கு போராடி இட ஒதுக்கீடு பெற்று தந்தவன் நான். இஸ்லாமிய சமுதாயத்திற்கு 7 மாநாடு நடத்தி இட ஒதுக்கீடு பெற்று கொடுத்தேன். 7வது மாநாட்டில் இட ஒதுக்கீடு வழங்காமல் இருந்தால் போராட்டம் நடத்துவேன் என்று அறிவித்த பின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இட ஒதுக்கீடு வழங்கினார்.
அதேபோல் விசுவகர்ம சமுதாயத்திற்கும் இட ஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும். இதற்கு முழு ஆதரவாக நான் நிற்பேன். சமூகநீதி என்பது ஒவ்வொருவரின் பிறப்புரிமை. எனவே அனைவருக்கும் இது கிடைக்கும் வகையில் அரசு கூடுதல் கவனம்
செலுத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை
வைத்தோம். ஆனால் இன்று வரை நடத்தப்படவில்லை” என்று பேசினார்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஏற்கனவே அரசை வலியுறுத்தி வருகிறோம். முதல்வரிடம் கோரிக்கையும் வைத்துள்ளோம். மீண்டும் கோரிக்கை வைப்பேன். ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் செய்வது அநியாயம். அவர் கேட்ட விளக்கத்தை அரசு வழங்கியும், ஒப்புதல் வழங்காமல் இருப்பது அநியாயத்திலும் அநியாயம். ஆன்லைன் ரம்மியால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றது. 10.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு, அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. 10.5% இட ஒதுக்கீடு விரைவில் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.
11 12 2022
source https://news7tamil.live/governors-action-in-online-rummy-case-is-unfair-ramdas-alleges.html