வியாழன், 13 ஏப்ரல், 2023

இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: 10 ஆயிரத்தை தாண்டிய தினசரி தொற்று பாதிப்பு..

 13 4 23

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

நாட்டில் தீவிரமாகப் பரவிய கொரோனா அலை முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், மீண்டும் கொரோனா பாதிப்பு தலைதூக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியவும், தொற்றுக்கான அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ளவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், தொற்று பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டினால் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டிய நெருக்கடியில் அரசு இருக்கிறது. இந்த நிலையில் நேற்று தொற்று பாதிப்பு 7 ஆயிரத்து 830 ஆக இருந்த நிலையில், இன்று உச்ச பட்சமாக 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்த நிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 998 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10 ஆயிரத்து 158 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் கொரோனா தொற்றால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 356 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 958 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா


source https://news7tamil.live/corona-speeding-up-again-in-india-daily-infection-rate-exceeds-10-thousand.html