வியாழன், 13 ஏப்ரல், 2023

புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ராணி ரமாதேவி மறை

 13 4 23 

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ராஜமாதா ராணி ரமாதேவி தொண்டைமான் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார்.  பல்வேறு கட்சித் தலைவர்கள் அவருடைய மறைவுக்கு  இரங்கல் தெரிவித்துள்ளனர். அவருக்கு இன்று இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, உடல் அவரது இல்லத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. 

நமது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக பிரிட்டீஷார் ஆட்சி காலத்தில் பல சமஸ்தானங்கள், பாளையங்கள், ஜமீன்கள், நாடுகள் என மன்னர்கள் அவற்றை அரசாண்டு வந்தார்கள். நாடு முழுவதும் இது போன்ற சமஸ்தானங்கள் அதிகமாக இருந்தன. தமிழகத்தை பொருத்தவரை அப்படி ஒரு பிரபலமான சமஸ்தானமாக இருந்தது தான் புதுக்கோட்டை சமஸ்தானம். தொண்டைமான் மன்னர்கள் பரம்பரையில், புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னராக இருந்தவர் ராஜா ராஜகோபால தொண்டைமான் ஆவார். இவரின் தம்பி மனைவிதான் இந்த ராணி ரமாதேவி.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் இந்த சமஸ்தானங்கள் அனைத்தையும் இந்திய அரசுடன் இணைக்கும் பணியில் சர்தார் வல்லபாய் பட்டேல் ஈடுபட்டார். அப்படி சமஸ்தானங்கள் இணைக்கப்பட்ட போது அவற்றில் ஆட்சி செலுத்தி வந்த ராஜாக்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டன. ஆனால் எந்த சலுகையையும் பெறாமல் கருவூலத்தில் உள்ள பொன்னும் பொருளையும் அப்படியே ஒப்படைத்து, இணைக்கப்பட்ட சமஸ்தானம் என்கிற சிறப்புடன் திகழ்வது புதுக்கோட்டை சமஸ்தானம்.

அப்பேற்பட்ட புகழ் வாய்ந்த புதுக்கோட்டை சமஸ்தானத்தின், ராஜ மாதாவும் தற்போதைய மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமானின் தாயாருமாகிய ராணி ரமாதேவி நேற்று காலமானார். இவருக்கு வயது 85. ராணி மகாதேவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், திருச்சி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மன்னர் குடும்பம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராணி ராமதேவியின் மறைவிற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுக எம்பி எம் எம் அப்துல்லா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர் .

புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவரும், கழக அமைப்பு செயலாளர் திருமதி.சாருபாலா R. தொண்டைமான் அவர்களின் மாமியாருமான ராணி திருமதி.ரமாதேவி அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றேன். அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக கூறியிருந்தார்

நேற்று திருச்சி உள்ள அரண்மனையில் வைக்கப்பட்டிருந்த ராணியின் உடல் இன்று புதுக்கோட்டை அருகே இச்சடியில் உள்ள தெட்சிணாமூர்த்தி பண்ணைக்கு கொண்டு வரப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மறைந்த ராணி ரமா தேவியின் உடலுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு, வருவாய் அலுவலர் செல்வி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து புதுக்கோட்டை நகரில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த ராணி ரமாதேவி தொண்டைமானின் இறுதிச் சடங்குகள், தெட்சிணாமூர்த்தி பண்ணையிலேயே நடைபெறுகிறது.

மறைந்த ராணி ரமாதேவி 1939-ம் ஆண்டு அக்டோபர் 01-ஆம் தேதி காரைக்குடியில் பிறந்தார். அவர் தனது பள்ளி படிப்பை கோவை, திருச்சி, மும்பை, சென்னை ஆகிய இடங்களில் படித்துள்ளார். பின்னர் மைசூர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கில பட்டமும் பெற்ற இவர், 1954-ஆம் ஆண்டு, செப்டம்பர் 4 -ஆம் தேதி ராதாகிருஷ்ண தொண்டைமானை திருமணம் செய்துகொண்டார்.

ராணி ரமாதேவி தமிழ்நாடு தடகள சங்கத்தின் தலைவராகவும், தமிழ்நாடு நீச்சல் சங்கத்தில் தலைவராகவும், தமிழ்நாடு வாலிபால் சங்க துணை தலைவராகவும், எல்.ஐ.சி.யில் இயக்குனர் குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். புதுக்கோட்டை பாய்ஸ் கிளப் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் வாலிபால் மற்றும் பேட்மிண்டன் விளையாட்டில் சிறந்து விளங்கினார். இவர் தமிழ் மொழியோடு ஆங்கிலம், மலையாளம், இந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை கற்றிருந்தார். புதுக்கோட்டை சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் பள்ளியின் செயலாளராக இருந்தார். மேலும் புதுக்கோட்டையில் உள்ள பல கோவில்களுக்கு கும்பாபிஷேக குழு தலைவராகவும் இருந்துள்ளார்.

மறைந்த ராணி ரமாதேவிக்கு ராஜா ராஜகோபால தொண்டைமான் மற்றும் விஜயகுமார் தொண்டைமான் ஆகிய இரண்டு மகன்களும், ஜானகி மனோகரி ராஜாயி என்ற மகளும் உள்ளனர். இதில் மூத்தமகன் ராஜகோபால தொண்டைமானின் மனைவி திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மேயரான சாருபாலா தொண்டைமான் ஆவார். மகன் ராஜா ராஜகோபால தொண்டைமான் பிரபல துப்பாக்கி சுடும் வீரர் ஆவார். அகில இந்திய அளவிலர் இவர் பல பதக்கங்களை வென்றுள்ளார். இவரது மனைவி ராணி சாருபாலா தொண்டைமான் திருச்சி மாநகராட்சியின் மேயராக பதவி வகித்தவர். இரண்டு முறை தொடர்ந்து அவர் சுமார் 10 ஆண்டுகள் திருச்சி மாநகராட்சி மேயராக இருந்து சிறப்பாக மக்கள் பணியாற்றி மாநகர மக்களின் பாராட்டை பெற்றவர். இவர்கள் திருச்சியில் உள்ள புதுக்கோட்டை அரண்மனையில் வசித்து வருகிறார்கள்.

தற்போதுள்ள, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்திருக்கும் இடம் ராஜா ராஜ கோபால தொண்டைமானின் அரண்மனை ஆகும். புதுக்கோட்டை மக்கள் இன்னமும் மன்னர் குடும்பத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்து, அவர்களுக்கான மரியாதையை வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா


source https://news7tamil.live/leaders-mourn-the-demise-of-rani-ramadevi-from-pudukottai-royal-family.html