சர்வதேச சர்ஃப் ஓப்பன் போட்டி, மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 14 ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சர்ஃபிங் அசோசியேசன் மற்றும் இந்திய சர்ஃபிங் ஃபெடரேஷன் சங்கம் இணைந்து இந்தியாவில் முதன் முறையாக சர்வதேச சர்ஃப் ஓப்பன் போட்டியை நடத்துகின்றது. இப்போட்டி மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 14 ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.
சர்வதேச சர்ஃப் ஓப்பன்- தமிழ்நாடு போட்டிக்கான செய்தியாளர் சந்திப்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மற்றும் இந்திய சர்ஃபிங் சங்க தலைவர் அருன் வாசு, விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினர், செயலாளர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு, கடந்த ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. 16 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஹாக்கி போட்டி நடைபெறுகிறது. எனவே இதுபோல சர்வதேச நிகழ்வுகள் பல நடத்த திட்டமிட்டுள்ளோம். குறைந்தது இரண்டு மாதங்களுக்கு நான் உங்களை சந்திப்பேன் என வாக்குறுதி கொடுத்திருந்தேன். ஆனால் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை நான் உங்களை நேரில் சந்தித்து வருகிறேன். அதிலேயே தெரிந்துவிடும், விளையாட்டுத்துறையின் மீது இந்த அரசு எத்தனை முக்கியத்துவம் செலுத்தி வருகிறது என்று கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா
source https://news7tamil.live/august-14-international-surf-open-tournament-announcement-by-minister-udhayanidhi-stalin.html