14 4 23
பாஜகவில் இருந்து விலகிய கர்நாடக முன்னாள் துணை முதலமைச்சர் லக்ஷ்மன் சாவதி காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பா.ஜ.க. 189 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 166 தொகுதிகளுக்கும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 93 தொகுதிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், நேற்று வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ளது.
இதனால் கர்நாடக தேர்தல் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அடுத்த வாரத்தில் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், வேட்பாளருடன் யார் செல்ல வேண்டும் என்று ஏற்கனவே உறுதி படுத்தப்பட்ட நபர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
வேட்புமனு தாக்கல் தினமும் காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி இல்லை. வேட்பாளர் மனு தாக்கல் செய்ய வரும்போது, உடன் 4 பேர் மட்டுமே வர அனுமதி அளிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேட்புமனு படிவம் கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாஜக வின் வேட்பாளர் பட்டியலில் ஏற்கனவே போட்டியிட்ட பலருக்கு இடம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாஜகவின் முக்கிய தலைவருக்கு இடம் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருப்பதாகவும் இதனால் பிற கட்சியில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
முன்னாள் கர்நாடக துணை முதலமைச்சரும், பாஜக வின் லிங்காயத் பிரிவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான லக்ஷ்மன் சாவதி இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையாயை பெங்களூரில் சந்தித்துள்ளார். கடந்த புதன் கிழமை லக்ஷ்மன் சாவடி பாஜகவிலிருந்து விலகிய நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இது குறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஒரு முக்கியமான தலைவர் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறார். இப்படிப்பட்ட நல்ல தலைவர்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொள்வது எங்களது கடமை. 10 க்கும் மேற்பட்ட பாஜக எம்எல்ஏ க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு தயாராக உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
நான் என்னுடைய முடிவினை தெளிவாக எடுத்துவிட்டேன். மற்றவர்களைப் போல கையில் பிச்சை பாத்திரத்தி தூக்கிக் கொண்டு அலைபவன் நான் இல்லை. நான் ஒரு சுயமரியாதை உள்ள அரசியல்வாதி என லக்ஷ்மன் சாவதி தெரிவித்திருந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். எடியூரப்பாவிற்கு பிறகு லிங்காயத் சமூகத்தில் முக்கியமான தலைவரான லக்ஷ்மன் சாவதி காங்கிரஸில் இணைந்தது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://news7tamil.live/former-deputy-chief-minister-of-karnataka-lakshman-savathi-joins-congress.html