ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

புலவாமா தாக்குதல் தொடர்பாக மத்திய அரசு மீது விமர்சனம்; சத்ய பால் மாலிக்-ம் சர்ச்சைகளும்

 16 4 23

Satya-Pal
முன்னாள் ஜம்மு & காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் (கோப்பு படம்)

Deeptiman Tiwary

தி வயர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஊழல் மற்றும் 2019 புல்வாமா தாக்குதல் தொடர்பாக மோடி அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஜம்மு- காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக், சர்ச்சைகளுக்கு புதியவர் அல்ல.

ஆக்டிவ் ஆன அரசியல்வாதியாக இருந்தபோது வெளிப்படையாகப் பேசக்கூடியவராக அறியப்பட்ட சத்ய பால் மாலிக், 2017 ஆம் ஆண்டு தொடங்கி, 370வது சட்டப்பிரிவை ரத்து செய்யும் வரை ஜம்மு & காஷ்மீரில் ஒரு வருடம் ஆளுநராக இருந்தபோதும், பின்னர் கோவா மற்றும் மேகாலயாவில் ஆளுநராக இருந்தபோதும் மத்திய அரசுக்கு சங்கடமாக இருந்தார்.

• 2017 இல் பீகார் ஆளுநராக பதவியேற்ற, சத்ய பால் மாலிக் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் BEd கல்லூரிகளை சொந்தமாக வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார்.

• ஜம்மு & காஷ்மீர் ஆளுநராக இருந்தபோது, ​​நவம்பர் 2018 இல், சட்டசபையை கலைக்கும் போது, டெல்லியிடம் (அல்லது, மோடி அரசாங்கம்) ஆலோசித்திருந்தால், சஜாத் லோன் தலைமையிலான சிறுபான்மை அரசாங்கத்தை நிறுவ வேண்டியிருந்திருக்கும் என்று சத்ய பால் மாலிக் கூறினார். மேலும், வரலாறு என்னை ஒரு “நேர்மையற்ற மனிதர்” என்று நினைவு கூர்ந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

குவாலியர் பல்கலைக் கழகத்தில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய சத்ய பால் மாலிக் “எனவே நான் இந்த விஷயத்தை ஒருமுறை முழுமையாக முடித்துவிட்டேன். என்னை துஷ்பிரயோகம் செய்பவர்கள் அதைத் தொடர்ந்து செய்வார்கள், ஆனால் நான் சரியானதைச் செய்தேன் என்று நான் நம்புகிறேன்,” என்று கூறினார்.

• சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, ஜனவரி 7, 2019 அன்று, மாநிலத்தில் அனைத்தும் நன்றாக இருப்பதாக அப்போது கவர்னராக இருந்த சத்ய பால் மாலிக் கூறினார். ”பாட்னாவில் ஒரே நாளில் நடந்த கொலைகளின் எண்ணிக்கை, காஷ்மீரில் ஒரு வாரத்தில் நடந்த மரணங்களுக்கு சமம்,” என்றும் அவர் கூறினார். பீகாரில் அப்போது பா.ஜ.க- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி செய்தது.

• ஜூலை 2019 இல், ஜம்முவில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய சத்ய பால் மாலிக், ஊழல்வாதிகளைக் கொல்ல தீவிரவாதிகளுக்கு அழைப்பு விடுத்தார். மேலும், “துப்பாக்கி ஏந்திய இளைஞர்கள் தேவையில்லாமல் நிராயுதபாணிகளை கொல்கிறார்கள்… உங்கள் நாட்டையும் உங்கள் காஷ்மீரையும் கொள்ளையடித்தவர்களை கொல்லுங்கள்” என்றும் அவர் கூறினார்.

• லடாக் பிரிக்கப்பட்டு, ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாறிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு, கோவாவின் ஆளுநராக சத்ய பால் மாலிக் மாற்றப்பட்டார்.

பின்னர், மார்ச் 2020 இல், மேற்கு உ.பி.யின் பாக்பத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில், காஷ்மீர் ஆளுநர்கள் பெரும்பாலும் குடித்துவிட்டு கோல்ஃப் விளையாடுகிறார்கள் என்று கூறினார். மேலும், “ஆளுநருக்கு அங்கு வேலை இல்லை,” என்றும் அவர் கூறினார்.

• அதே மாதத்தின் பிற்பகுதியில், கோவாவில் பேசிய சத்ய பால் மாலிக், 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, ஜம்மு & காஷ்மீர் (J&K) வின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டால், 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்படலாம் என்று அப்போதைய தலைமைச் செயலாளரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகக் கூறினார்.

• அந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள், கோவாவில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க அரசாங்கத்திற்கு எதிராக அவர் பேசத் தொடங்கினார், மேலும் அரசாங்கம் கோவிட் தொற்றுநோயைக் கையாள்வது குறித்தும் அவர் விமர்சித்தார். ஆகஸ்ட் 2020 வாக்கில், சத்ய பால் மாலிக் மேகாலயா கவர்னராக மாற்றப்பட்டார்.

• அக்டோபர் 2021 இல், இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சத்ய பால் மாலிக், கொரோனா அதிகரித்த சமயத்தில் பிரமோத் சாவந்த் அரசாங்கம் தன்னை இருட்டில் வைத்திருப்பதாகவும், கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்து வரும் ராஜ்பவன் ஊழியர்களை நம்பியிருக்க வேண்டியிருந்தது என்றும் குற்றம் சாட்டினார்.

• பிரமோத் சாவந்த் அரசாங்கத்தில் பெரிய அளவிலான ஊழல் நடந்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார், மேலும் இதை வெளியே தெரியப்படுத்தியதற்காகத் தான் கோவாவில் இருந்து மாற்றப்பட்டதாகக் கூறினார். “நான் ஒரு லோஹியாவைட் (ராம் மனோகர் லோகியாவை பின்பற்றுபவர்), நான் சரண் சிங்குடன் நேரத்தை செலவிட்டுள்ளேன், ஊழலை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது,” என்று சத்ய பால் மாலிக் கூறினார், மேலும் வீடு வீடாக ரேஷன் விநியோகம் சம்பந்தப்பட்ட ஊழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரிவித்ததாக அவர் கூறினார்.

• அவர் மேகாலயா ஆளுநராக இருந்தபோது, ​​காஷ்மீரில் பொதுமக்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகளுக்கு மத்தியில், சத்ய பால் மாலிக், தனது காலத்தில் இது நடக்கவில்லை என்று கூறினார், மேலும் ஜம்மு & காஷ்மீரில் ஊழல் செய்ததாக ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ஒருவர் மீது குற்றம் சாட்டினார்.

“ஜம்மு காஷ்மீரில் இரண்டு கோப்புகள் என் முன் வந்தன. அவற்றில் ஒன்று அம்பானிக்கும் மற்றொன்று மூத்த ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிக்கும் உரியது. இது மோசடி கோப்புகள் என்று செயலாளர் ஒருவர் என்னிடம் கூறினார், ஆனால் இரண்டு பேரங்களிலும் தலா ரூ.150 கோடி பெறலாம் என்றும் அந்த அதிகாரி கூறினார். நான் ஐந்து குர்தாக்களுடன் வந்துள்ளேன், அவற்றுடன் வெளியேறுவேன் என்று கூறி அந்த வாய்ப்பை நிராகரித்தேன்,” என்று சத்ய பால் மாலிக் கூறினார்.

• இந்த பேச்சு பெரும் சர்ச்சையை உருவாக்கியது, மேலும் அதை அறிந்த ஜம்மு & காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். சி.பி.ஐ தொடர்ந்து இரண்டு எஃப்.ஐ.ஆர்.,களைப் பதிவுசெய்தது, மேலும் பல சோதனைகளை நடத்தியது மற்றும் இந்த விஷயத்தில் சத்ய பால் மாலிக் உட்பட பலரை விசாரித்தது.

• பிப்ரவரி 2021க்குள், சத்ய பால் மாலிக் வெளிப்படையாக மத்திய அரசை விமர்சித்தார். அந்த மாதம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில், நவம்பர் 2020 முதல் நடைமுறையில் உள்ள மூன்று சர்ச்சைக்குரிய விவசாயச் சட்டங்கள் மீதான போராட்டங்களை அரசாங்கம் கையாள்வதற்கு எதிராக சத்ய பால் மாலிக் பேசினார்.

“விவசாயிகளை அவமானப்படுத்தி திருப்பி அனுப்ப முடியாது. அவர்களை அவமானப்படுத்தி போராட்டங்களில் இருந்து திருப்பி அனுப்ப முடியாது. நீங்கள் அவர்களை உரையாடலில் ஈடுபடுத்த வேண்டும்,” என்று சத்ய பால் மாலிக் கூறினார்.

• ஒரு மாதத்திற்குப் பிறகு, பாக்பத்தில் நடந்த கூட்டத்தில் சத்ய பால் மாலிக் இந்தப் பிரச்சினையை பகிரங்கமாக எழுப்பினார், சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட ஆபரேஷன் புளூ ஸ்டார் போன்ற ஒரு பின்னடைவு ஏற்படலாம் என்று பரிந்துரைத்தார்.

• நவம்பர் 2021 இல், ஜெய்ப்பூரில் நடைபெற்ற ‘உலகளாவிய ஜாட் உச்சி மாநாட்டில்’ உரையாற்றிய சத்ய பால் மாலிக், “600 பேர் தியாகிகளாகிய இவ்வளவு பெரிய போராட்டத்தை நாடு பார்த்ததில்லை. விலங்குகள் இறந்தாலும் டெல்லி தலைவர்களால் இரங்கல் செய்தி வெளியிடப்படுகிறது. ஆனால் 600 விவசாயிகளின் மரணம் குறித்து எந்த பிரஸ்தாவ் (அறிக்கை) வெளியிடப்படவில்லை,” என்று கூறினார்.

• ஜனவரி 2022 இல், மேற்கு உ.பி.யில் உள்ள தாத்ரியில் விவசாயிகளின் போராட்டங்கள் தொடர்பாக ஆற்றிய உரையில் சத்ய பால் மாலிக் பிரதமரைத் தாக்கி பேசினார். “விவசாயி பிரச்சினை குறித்து விவாதிக்க நான் பிரதமரை சந்திக்கச் சென்றபோது, ​​ஐந்து நிமிடங்களில் அவருடன் சண்டையிட்டு முடித்தேன். அவர் மிகவும் திமிர் பிடித்தவராக இருந்தார். நம்முடைய (விவசாயிகள்) 500 பேர் இறந்துவிட்டார்கள் என்று நான் அவரிடம் சொன்னபோது, ​​அவர், ‘எனக்காக இறந்தார்களா?’ என்று கேட்டார், ”என்று சத்ய பால் மாலிக் விழாவில் பேசியதாக வீடியோ கிளிப் கூறியது.

• செப்டம்பர் 2022 இல், குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது மோடி “தங்கம் போன்றவர்” ஆனால் அவர் டெல்லிக்கு வந்த பிறகு மாறிவிட்டார் என்று ரோஹ்தக்கில் நடந்த ஒரு சமூகக் கூட்டத்தில் சத்ய பால் மாலிக் கூறியதாக தி ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டது.

• அக்டோபர் 2022 இல், மேகாலயா ஆளுநராகப் பதவி வகித்த பிறகு, சத்ய பால் மாலிக் உ.பி.யில் உள்ள புலந்த்ஷாஹரில் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார், அங்கு ஆயுதப் படைகளில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான அக்னிபத் திட்டத்தை விமர்சித்தார். IANS அறிக்கையின்படி, அரசாங்கம் இளைஞர்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதாக சத்ய பால் மாலிக் கூறினார்


source https://tamil.indianexpress.com/india/satya-pal-malik-in-and-out-of-raj-bhavan-never-far-from-controversy-639704/