16 4 23
உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் போலீசார், குண்டர் கும்பலாக மாறிய அரசியல்வாதியான அதிக் அகமது மற்றும் அவரது இளைய சகோதரர் காலித் அசிம் என்ற அஷ்ரப் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் பின்னர் பிடிபட்ட 3 பேர் லாவ்லேஷ் திவாரி, அருண் மவுரியா மற்றும் சன்னி சிங் என முதல் பார்வையில் அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள் முறையே பண்டா, கஸ்கஞ்ச் மற்றும் ஹமீர்பூரைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை (ஏப்ரல் 15) இரவு மோதிலால் நேரு மண்டல மருத்துவமனையின் (கொல்வின்) வாயிலில் அதிக் மற்றும் அஷ்ரஃப் சுட்டுக் கொல்லப்பட்டனர், அங்கு பிரயாக்ராஜ் போலீசார் அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். உமேஷ் பால் கொலை வழக்கில் அதிக் மற்றும் அஷ்ரப் நான்கு நாட்கள் போலீஸ் காவலில் இருந்தனர். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சகோதரர்கள் இருவரும் பதில் அளித்து வந்த நிலையில், நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொலைக்காட்சியில் நேரலையாக படம்பிடிக்கப்பட்டது.
பிடிபட்ட மூன்று பேரின் பின்னணி தகவல்களை போலீசார் சேகரித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆதாரங்களின்படி, சன்னி சிங் ஹமீர்பூரின் குராரா பகுதியில் வசிப்பவர். சன்னியின் மூத்த சகோதரர் பிண்டூ சிங், 10 ஆண்டுகளாக அவர் வீட்டில் இல்லை என்று ஊடகங்களுக்கு தெரிவித்தார். “கிரிமினல் வழக்குகளில் அவர் ஈடுபட்டதால் நாங்கள் அவருடனான உறவை முறித்துக் கொண்டோம்” என்று பிண்டூ கூறினார்.
பண்டாவின் லோமர் கிராமத்தைச் சேர்ந்த லவ்லேஷ் திவாரியின் தந்தை யக்யா குமார் திவாரி ஒரு தனியார் ஓட்டுநர். லவ்லேஷ் கடந்த 7 ஆண்டுகளாக பண்டாவில் உள்ள கெவ்தாரா பகுதியில் வாடகைக்கு தங்கியிருந்ததாக வீட்டின் உரிமையாளர் ரமேஷ் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ரமேஷ் குமார் ஊடகங்களிடம் கூறுகையில், “நேற்றைய துப்பாக்கிச் சூட்டில் அவர் ஈடுபட்டதை அறிந்ததும் நாங்கள் ஆச்சரியமடைந்தோம். ஒரு பெண்ணைத் தாக்கியதாக லவ்லேஷ் சில ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்,” என்று கூறினார்.
மூன்று சகோதரர்களில் இளையவரான அருண் மௌரியா காஸ்கஞ்சில் உள்ள பகேலா புக்தா கிராமத்தைச் சேர்ந்தவர். அருண் தனது பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு வீட்டை விட்டு வெளியேறியதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர், மேலும் அவர் அவ்வப்போது வந்து செல்வதாகவும், நொய்டாவில் தங்கியிருப்பதாகவும் கூறினார்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, உத்தரப் பிரதேச அரசு அனைத்து மாவட்டங்களிலும் சி.ஆர்.பி.சி.,யின் 144 வது பிரிவின் கீழ் தடை உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த கொலைகள் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட நீதித்துறை ஆணையத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைத்தார்.
பிரயாக்ராஜ் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையைச் சுற்றியுள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. உடல்களின் போஸ்ட்மார்ட்டம் இன்னும் தொடங்கவில்லை.
இந்தநிலையில், “குண்டர்களாக மாறிய அரசியல்வாதியான அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப்-ஐ நாங்கள் பிரபலமடைவதற்காக கொல்ல விரும்பினோம்” என்று பிரயாக்ராஜில் அதிக்-அஷ்ரஃப் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மூன்று துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், விசாரணையின் போது போலீஸாரிடம் கூறியதாக FIR இல் குறிப்பிடப்பட்டுள்ளது, என ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.
மேலும், பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் படி, தாக்குதல் நடத்தியவர்கள் உத்தரபிரதேச காவல்துறையிடம், திக் அகமது மற்றும் அவரது சகோதரரைக் கொல்வதற்காக பத்திரிக்கையாளர்களாக வந்ததாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. “அதிக் மற்றும் அஷ்ரப் போலீஸ் காவலில் வைக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததும், நாங்கள் பத்திரிகையாளர்கள் போல் காட்டிக்கொண்டு உள்ளூர் பத்திரிகையாளர்களிடையே நடமாட ஆரம்பித்தோம், மேலும் அவர்கள் இருவரையும் கொல்ல திட்டமிட்டோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.
source https://tamil.indianexpress.com/india/jobless-drug-addicts-kin-duo-shot-dead-atiq-ahmed-brother-ashraf-639993/