திங்கள், 17 ஏப்ரல், 2023

டிரைவிங் ஸ்கூலுக்கு இனி அதிக பணம் கட்ட வேண்டாம்: போக்குவரத்து துறையின் அதிரடி முடிவு

 17 4 23

rto

ஓட்டுநர் உரிமம் பெற சோதனைக்கு உட்படுத்தப்படும் நபர்களிடம் சொந்த வாகனங்கள் இல்லையென்றால், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள வாகனங்களை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைப்பற்றி, மாநில போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறுகையில், “பல விண்ணப்பதாரர்கள் டிரைவிங் ஸ்கூல்களை அணுகி, தேர்வு எழுத முற்படும்போது, தங்களிடம் சொந்த வாகனம் இல்லாததால், அதிக கட்டணம் செலுத்துகின்றனர். இதனால், தமிழகத்தில் உள்ள 145 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இலகுரக மோட்டார் வாகனங்களை வாங்க முடிவு செய்திருக்கிறோம்”, என்றார்.

மேலும், இந்த முடிவினால் டிரைவிங் ஸ்கூலின் வருமானம் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. தற்போது, ​​டிரைவிங் ஸ்கூல்கள் ஒரு விண்ணப்பதாரரிடம் இருந்து ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை வசூலிக்கின்றனர்.

“பலர் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவியுடன் வாகனம் ஓட்ட கற்றுக்கொண்டாலும், டிரைவிங் ஸ்கூல்களை அணுகும்போது கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது” என்று போக்குவரத்து ஆர்வலர் ஆர் ரெங்காச்சாரி கூறினார்.

இதைத்தொடர்ந்து, வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் திட்டத்திற்காக மாநில போக்குவரத்து துறை 6.25 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. அனைத்து 145 வாகனங்களும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட அடிப்படை மாடல் கார்களாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமத் தேர்வுக்கு ஆட்டோமேட்டிக் கார்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதலின்படி 145 வாகனங்கள் கொண்டுவர உள்ளனர்.

மேலும், இலகுரக வாகனங்களுக்கு உரிமம் வைத்திருப்பவர் கிளட்ச், கியர் மற்றும் பிரேக்குகளின் செயல்பாட்டை அறிந்திருக்க வேண்டும் என்றும், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வழங்கிய அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-government-to-buy-145-lmv-for-driving-licence-tests-640307/