6 4 23
தமிழக சட்டபேரவையில் கேள்வி கேட்க அனுமதி வழங்காததால் சத்தம் போட்ட பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனை சபாநாயகர் கண்டித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், கேள்வி நேரத்தின்போது, துணை கேள்விக்கு அமைச்சர்கள் சார்பாக பதில் அளிக்கப்பட்டது. சபாநாயகர் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களாக எழுந்து கேள்வி கேட்க அனுமதி அளித்தார். அப்போது சட்டப்பேரவையில் நேரத்தின் போது உறுப்பினர் ஒருவர் எழுப்பிய துணைக் கேள்விக்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பதில் அளிக்க எழுந்தார். அப்போது எழுந்து குறுக்கிட்ட பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவருமான வேல்முருகன் கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும் என கோரினார். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் வேல்முருகன் அவையில் சத்தம் போட்டார்.
அதற்கு விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு, வேல்முருகனுக்கு கடந்த மார்ச் 24, 28 ,30 ,31 ஆம் தேதிகளில் கேள்வி கேட்கவும் துணை கேள்வி கேட்கவும் அனுமதி வழங்கப்பட்டது. மேலும் முக்கிய தீர்மானங்களின் போது கட்சி தலைவர் என்ற அடிப்படையில் தொடர்ந்து பேச அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. எல்லா நாளுமே கேள்வி கேட்பதற்கும் துணை கேள்வி கேட்பதற்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று மரபு கிடையாது . பல உறுப்பினர்கள் இதுவரை ஒரு முறை கூட கேள்வி கேட்காமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு தான் வாய்ப்பு வழங்க முடியும்.
கட்சி சார்பிலோ உள்நோக்கத்தோடோ யாருக்கும் கேள்வி கேட்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. யாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். யாருக்கு கொடுக்கக் கூடாது என்பது எனக்கு தெரியும். எந்த பாகுபாடும் இல்லாமல் தான் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவையில் பெரிய சத்தம் எல்லாம் போடக்கூடாது என்று எச்சரித்தார். இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அவரை தொடர்ந்து பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சபாநாயகர் சிறப்பு வாய்ந்த வரலாற்று மிக்க சட்டமன்றத்தை நடத்தி வருகிறார் . அவர் ஏற்கனவே ஆசிரியராக பணிபுரிந்தவர். இன்று தான் புரிந்து கொள்ள முடிகிறது அவர் கனிவான ஆசிரியர் மட்டுமல்ல கண்டிப்பான ஆசிரியரும் கூட என கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா
source https://news7tamil.live/dad-warned-mla-velmurugan-agitation-in-the-legislative-assembly.html