8 4 23
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை எண்ணி மக்கள் அச்சத்தில் இருப்பதால், இதைப்பற்றி மேலும் தகவல்கள் வழங்க, தமிழகத்தில் உள்ள மருத்துவ வசதிகளை பற்றி எடுத்துரைக்க அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.
அங்கு அவர் கூறியதாவது, “முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் ஏறக்குறைய 1,800 மருத்துவமனைகள் இன்றைக்கு பயன்பாட்டில் இருந்துகொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், ஏராளமான மருத்துவமனைகளின் பயன்பாடும், ஏராளமான மருத்துவ சிகிச்சைகளும் தமிழகத்தில் தான் அதிகமாக இருந்துகொண்டிருக்கிறது.
ஏறக்குறைய 1,500க்கும் மேற்பட்ட சிகிச்சை முறைகள் இந்த விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ பலன் கிடைத்துக்கொண்டிருக்கிறது.
ரூ.5 லட்சத்தில் தொடங்கி ஒவ்வொரு குடும்பத்தினருக்கும், மிகப்பெரிய அளவில் பலன் தந்துகொண்டிருக்கிறது.
ஏராளமான உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஏறக்குறைய ரூ.22 லட்சம் வரை முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகிறார்கள்.
பிரதமர் காப்பீட்டு திட்டம், முதல்வர் காப்பீட்டு திட்டம் என்று இரண்டுமே தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.
பத்தாண்டிற்கு பிறகு, கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதை தொடர்ந்து, சென்னையில் நான்கு இடங்களில் மருத்துவ முகாம்கள் வைக்க திட்டமிடப்படுகிறது.
மேலும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாநகராட்சிகளிலும் நான்கு மருத்துவ முகாம்கள் என்று, மொத்தம் 1,250 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
அதன்படி, கடந்த ஆண்டு 1,260 மருத்துவ முகாம்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இதன்மூலம், ஒன்பது லட்சத்தி ஆறாயிரத்தி நானூற்றி இருபத்தி ஏழு பேர் சிகிச்சை பெற்றார்கள்.
முதல்வரின் வருமுன் காப்போம் திட்டத்தை தேவை அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் 1,497 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது.
மேலும் தற்போது, சென்னை சோழிங்கநல்லூரில் மக்களின் தேவைக்கேற்ப, மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்பு மருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருக்கிறது.
இந்தியாவில் மற்ற மாநிலங்களில் கொரோனா பெருந்தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் தமிழக மக்கள் பதற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை.
தற்போது பரவிவரும் தொற்று, வீரியமிக்க வைரஸாக இல்லை. பாதிக்கப்பட்ட நபர் தன்னை 5- 6 நாட்கள் தனிமைபடுத்திக் கொள்வதும், மருத்துவர்களின் ஆலோசனை பெற்று மருந்துகள் உட்கொள்வதும் சரியான தீர்வு ஆகும்”, என்றார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/medical-camps-in-chennai-press-meet-by-minister-m-subramanian-632132/