திங்கள், 15 மே, 2023

500 மதுக் கடைகள் மூடல்: கருணாநிதி பிறந்தநாளில் அறிவிப்பு

 15 5 23

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் 500 மதுக் கடைகள் இந்தாண்டு மூடப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்திலாபாலாஜி சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடியிருப்பாளர்களின் புகார்களின் அடிப்படையில் கோவில்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் அமைந்துள்ள மதுபானக் கடைகளை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாக டாஸ்மாக் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

மாநிலம் முழுவதும் தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சொந்தமாக 5,329 சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 96 மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

மேலும், சென்னையில் பல இடங்களில் 500 மீட்டர் சுற்றளவில் செயல்படும் இரண்டுக்கும் மேற்பட்ட மதுக் கடைகளால் அங்கு மது அருந்த நிறைய பேர் வருவதாகவும் இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாவதாக புகார் தெரிவிக்கின்றனர். சட்டவிரோதமாக கடைகள் வைத்து பார்கள் நடத்தி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

டாஸ்மாக் மூலம் மாநில அரசுக்கு வருவாய் 2021-22-ல் ரூ. 36,056 கோடியிலிருந்து 2022-23-ல் ரூ. 44,098 கோடியாக அதிகரித்துள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tasmac-to-close-500-outlets-in-tamil-nadu-may-announce-it-on-m-karunanidhis-birth-anniversary-668644/