5 5 23
சிறுபான்மையினருக்கு எதிரான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை தடை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், தியேட்டரை முற்றுகையிட்டு படத்தை தமிழகத்தில் ஓடவிடமாட்டேன்” என்று சீமான் வெள்ளிக்கிழமை கூறினார்.
பண்டிதர் அயோத்திதாசரின் 109-வது நினைவு நாளை முன்னிட்டு தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, திராவிட மாடல் காலாவதியான மாடல் என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூறியிருப்பது குறித்து சீமானிடம் கருத்து கேட்டனர். இதற்கு, பதிலளித்த சீமான், “அதற்கு முன்னதாக காலாவதியான மாடல் குஜராத் மாடல். இப்பதான் இந்த திராவிட மாடல் 2 ஆண்டுகளாக இருக்கிறது. அது பழைய அம்பாசடர், இது கொஞ்சம் புதுசு. இது ஒரு இத்துப்போன மாடல், அவர் சொல்வதை நான் ஏற்கிறேன். இது ஒரு கிழிஞ்சுபோன மாடல்தான். கொஞ்சம் பழுதுநீக்கி ஓட்டுகிறார்கள். இன்னும் 2 வருடம் ஓட்டுவார்கள்.” என்று கிண்டல் செய்து நகைச்சுவையாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய சீமான், கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போது டாவின்சி கோட் படத்துக்கு தடை விதித்தார்கள். அதை தடை செய்துவிட்டு கேரளா ஸ்டோரியை எதற்கு தடை செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “ தமிழ்நாடு அரசு தயவு செய்து அந்த படத்தை தடை செய்ய வேண்டும். இல்லையென்றால், நான் தியேட்டரை முற்றுகையிடுவேன். எப்படி ஒரு காட்சி ஓடுகிறது என்று பார்ப்போம்.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய சீமான், “தமிழகத்திற்கு என்று தனிப்பட்ட முறையில் எந்த பெருமையும் இருக்கக்கூடாது என்பதன் அடிப்படையில் வரலாற்று போராளிகளின் பெயர்களை மறைத்து இந்த திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது.
தொடர்ந்து தமிழர்களின் பெருமையும் தனிச்சிறப்பும் திராவிட ஆட்சியாளர்களால் மறைக்கப்பட்டு வருகிறது. சமாதி கட்டுவது பேனா வைக்க நிதியை ஒதுக்கிவிட்டு, பள்ளிக்கூடங்களை சீரமைக்க மக்களிடம் கையேந்துவது இதுதான் திராவிட மாடல். திராவிட மாடல் ஒரு இத்துப்போன மாடல் தான் என்று ஆளுநர் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன்.
தமிழகத்தில் வெளியாகி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தடை செய்ய கேட்டுக் கொண்டிருக்கிறோம். எதற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். சிறுபான்மை மக்களை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு அவர்களுக்கு எதிராக வெளியான படத்தை தமிழகத்தில் வெளியிடுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். திரையரங்குகள் முன்னால் போராடினால் தமிழக அரசால் என்ன செய்ய முடியும்.
பா.ஜ.க-வின் வளர்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. ஒன்றுமே இல்லாத பாஜகவை ஒற்றுமையாக்கியது தி.மு.க. ஹெச்.ராஜா, லட்சுமணன் போன்றவர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பியது திமுக தான். தொழிலாளர் நலச் சட்டத்தை அவசர அவசரமாக திமுக கொண்டு வந்ததன் காரணம் என்ன? பா.ஜ.க ஆளுகின்ற மாநிலங்களில் கூட கொண்டு வரவில்லை. அவசர அவசரமாக சட்டத்தைக் கொண்டு வந்து பின்னர் திரும்ப பெற்றது ஏன்? அதனால் பா.ஜ.க-வின் வருடிகளாக தி.மு.க உள்ளது என்பதே உண்மை” என்று கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/seeman-says-i-will-not-let-the-kerala-story-film-run-in-tamil-nadu-660471/