5 5 23
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மெல்ல மெல்ல கட்டணத்தை அமல்படுத்தி தனியார் மயமாக்கும் மோடி அரசின் திட்டங்களில் இதுவும் ஒன்று என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்*
ஜிப்மர் மருத்துவமனையில் ஏழை மக்களிடம் பரிசோதனை மற்றும் மருத்துவத்திற்கு கட்டண வசூலிக்கும் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மருத்துவமனை முன்பு நடைபெற்றது.
புதுச்சேரி மாநில அமைப்பாளர் தேவப்பொழியின் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், மற்றும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஜிப்மர் நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்த போராட்டத்தில் கடலூர் விழுப்புரம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் என திரளாக கலந்து கொண்டனர்
ஆர்ப்பாட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், “தமிழகம் புதுச்சேரி மக்களின் நம்பிக்கை பெற்ற மருத்துவமனையாக ஜிப்மர் இயங்கி வருகிறது.
உயிர் காக்கும் பல்வேறு வகையான உயர்வகை மருத்துவங்கள் இங்கே வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் ஏகப்பட்ட தனியார் மருத்துவமனைகள் இருந்தாலும் ஜிப்மர் மருத்துவமனையின் மீது உள்ள நம்பிக்கை மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளது .
அப்படி சிறப்பு வாய்ந்த ஜிப்மர் மருத்துவமனைக்கு என்ன கேடு வந்தது என்று தெரியவில்லை இன்று கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றார்.
அரசு துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது தான் மோடியின் திட்டம், மோடியால் தான் கேடு. பொதுத்துறை நிறுவனங்களான விமான நிலையம், துறைமுகம் என்.எல்.சி போன்றவைகளை தனியாருக்கு தாரை வார்க்க திட்டம் போட்டு வருகிறார்கள்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்த பொழுது 14 தனியார் வங்கிகளை தேசிய மையம் ஆக்கினார்கள். ஆனால் தற்போது தேசிய வங்கிகளை எல்லாம் மோடி தனியார் மையம் ஆக்கி வருகிறார்.
மோடி பிரதமராக வந்தவுடன் அதானி உலக பணக்கார வரிசையில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார். இது எப்படி என்று கேள்வி எழுப்பிய அவர் உழைக்கும் பாட்டாளி மக்களால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை.
ரத்த பரிசோதனை செய்தால் கூட இன்று ஜிப்ரில் பணம் கட்ட வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. தனக்கான தேவைகளை தானே செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக பொதுமக்களிடம் பணம் வசூலிப்பது என்பது தவறானது.
மருத்துவமனை, ரயில்வே நிலையம், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வட மாநிலத்தவர்களின் ஆதிக்கங்கள் அதிகமாக உள்ளது.
இங்க பணிபுரியும் வட மாநிலத்தவர்கள் தமிழ் தெரியவில்லை என்றால் வெட்கப்படுவதில்லை. ஆனால் நாம் இந்தி தெரியவில்லை என்று வெட்கப்படுகிறோம் இந்த நிலை மாற வேண்டும்.
மொழி தெரியாத ஒரு மருத்துவரால் எப்படி ஒரு நோயாளியின் வலியை புரிந்து கொள்ள முடியும். வடமாநிலத்தவர்களால் மொழி திணிப்பு கலாச்சார திணிப்பு வெற்றிகரமாக மோடியால் நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.
மேலும், ஜிப்மர் நிர்வாகம் கட்டணத்தை மெல்ல மெல்ல வசூலித்து தனியார் மயமாக்க மோடி அரசு திட்டமிட்டு உள்ளதாக குற்றம் சாட்டிய அவர், மோடி அரசின் கொள்கைகளில் இதுவும் ஒன்றாகும் என்றார் .
source https://tamil.indianexpress.com/tamilnadu/thirumavalavan-protests-against-puducherry-jipmar-hospital-fee-collection-660604/