7 6 23

தேசிய தலைநகர் டெல்லியில் புதன்கிழமை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இல்லத்தில் நடந்த நீண்ட சந்திப்புக்குப் பிறகு, நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள் சிலர் ஜூன் 15 வரை தங்கள் போராட்டத்தை நிறுத்தி வைப்பதாகக் கூறினர்.
“ஜூன் 15 ஆம் தேதிக்குள் போலீஸ் விசாரணை முடிவடையும் என்று அரசாங்கம் எங்களுக்கு உறுதியளித்துள்ளது. மல்யுத்த வீரர்களுக்கு எதிரான அனைத்து எஃப்.ஐ.ஆர்.,களையும் திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்தோம், அதற்கு அமைச்சர் ஒப்புக்கொண்டார். ஜூன் 15 ஆம் தேதிக்குள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், நாங்கள் எங்கள் போராட்டத்தைத் தொடருவோம்,” என்று பஜ்ரங் புனியா ANI இடம் கூறினார், காலை 11:00 மணிக்கு தொடங்கிய கூட்டம் புதன்கிழமை மாலையில் முடிந்தது. கூட்டத்தில் பஜ்ரங் புனியாவுடன் சாக்ஷி மாலிக் கலந்துக் கொண்டார்
போராட்டத்தின் முக்கிய முகமான வினேஷ் போகட், ஹரியானாவில் உள்ள தனது கிராமமான பலாலியில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ‘பஞ்சாயத்தில்’ கலந்து கொள்ள இருந்ததால் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
“மல்யுத்த வீரர்களுடன் நான் 6 மணி நேரம் கலந்துரையாடினேன். ஜூன் 15ம் தேதிக்குள் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என மல்யுத்த வீரர்களுக்கு உறுதி அளித்துள்ளோம். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தேர்தல் ஜூன் 30 ஆம் தேதிக்குள் நடத்தப்படும்” என்று மல்யுத்த வீரர்களை சந்தித்த பிறகு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
முன்னதாக, அனுராக் தாக்கூர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில், ட்விட்டர் மூலம் மல்யுத்த வீரர்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். “மல்யுத்த வீரர்களுடன் அவர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அரசாங்கம் தயாராக உள்ளது. அதற்காக மல்யுத்த வீரர்களை மீண்டும் ஒருமுறை அழைத்துள்ளேன்,” என்று அனுராக் தாக்கூர் ட்விட்டரில் எழுதினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைநகரில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களின் குழுவைச் சந்தித்த நான்கு நாட்களுக்குப் பிறகு இந்த அறிக்கை வந்தது.
பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக மல்யுத்த வீரர்கள் ஏப்ரல் 23 அன்று ஜந்தர் மந்தரில் தங்கள் போராட்டத்தை மீண்டும் தொடங்கினர், இந்திய மல்யுத்த சம்மேளனம் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை பாலியல் துன்புறுத்தல் மற்றும் தவறான நடத்தை குற்றம் சாட்டி கைது செய்யக் கோரி இந்த போராட்டத்தை தொடர்ந்தனர்.
டெல்லி காவல்துறை ஏப்ரல் 28 அன்று பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக இரண்டு எஃப்.ஐ.ஆர்.,களைப் பதிவு செய்தது, எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளபடி, தொழில்முறை உதவிக்கு பதிலாக “பாலியல் சலுகைகள்” கோரும் இரண்டு நிகழ்வுகள் உள்ளன; 15 க்கும் மேற்பட்ட பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள், தகாத தொடுதல், மார்பகத்தின் மீது கைகளை வைத்து நகர்த்துதல், தொப்புளைத் தொடுதல், பின்தொடர்தல் உட்பட பல மிரட்டல் நிகழ்வுகள் போன்ற 10 சம்பவங்களும் அடங்கும்.
source https://tamil.indianexpress.com/sports/wrestlers-agree-to-halt-protests-until-june-15-government-police-investigation-bajrang-punia-690249/