வெள்ளி, 30 ஜூன், 2023

மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசியல் வேறுபாடுகள் தடையாக இருக்கக்கூடாது! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசியல் வேறுபாடுகள் தடையாக இருக்கக்கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் சென்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தடுக்கப்பட்ட நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு குகி என்ற பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றர். பழங்குடியின அந்தஸ்து வழங்கப்பட்டால் தங்களுக்கு சலுகைகள் பாதிக்கப்படும் என அவர்கள் கூறி வருகின்றனர்.

இதுதொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியுள்ளது. கடந்த 50 நாட்களாக அங்கு கலவரம் நீடிக்கிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. சுமார் 130 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு 350 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு இரு நாள் பயணமாக ராகுல் காந்தி இன்று பயணம் மேற்கொண்டார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்ற அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக சுராசந்த்பூர் மாவட்டத்திற்கு சென்றார். அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்ற ராகுல் காந்தியை அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர் தொடர்ந்து முன்னேறி செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, ராகுல் காந்தி மீண்டும் இம்பால் திரும்பினார்.

ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டது கடும் கண்டனத்துக்கு உள்ளானது. இதனை அடுத்து ராகுல் காந்தி பொதுமக்களை சந்திக்க, ஹெலிகாப்டர் மூலம் செல்லலாம் என அனுமதிக்கப்பட்டது. ஆனால் பாதுகாப்பு படையினரின் அறிவுறுத்தல்களை நிராகரித்து சாலை மார்க்கமாகத்தான் செல்வோம் என ராகுல் தரப்பு பிடிவாதம் காட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர் ஒருவழியாக ஹெலிகாப்டர் மூலம் சென்று பாதிக்கப்பட்ட மக்களை ராகுல் காந்தி சந்தித்தார்.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மணிப்பூரில் உள்ள குடும்பங்களின் வாழ்வில் அமைதியை மீட்டெடுக்கும் நோக்கில், நம்மை அவர்களின் குடும்பத்தில் ஒருவராக கருதி செயல்படுவது நமது கூட்டுப் பொறுப்பாகும் என தெரிவித்துள்ளார்.

அதோடு அவர்களின் வாழ்வில் அமைதியைக் கொண்டுவருவதற்கான நமது முயற்சிகளுக்கு அரசியல் வேறுபாடுகளோ அல்லது வேறு தடைகளோ ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது எனவும் கூறியுள்ளார். ராகுல் காந்தியை மணிப்பூரில் தடுத்து நிறுத்தியது அங்கு அமைதியை நிலைநாட்டுவதை தடுப்பதாக உள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மணிப்பூரில் உள்ள நமது சகோதர சகோதரிகளின் குரல்களுக்கு செவிசாய்ப்போம் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


source https://news7tamil.live/political-differences-should-not-stand-in-the-way-of-ending-the-manipur-riots-cm-stalin.html