18 6 23
குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படும் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்ர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்த விபரம் வருமாறு;
திருச்சி மாநகர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அரியமங்கலம் பகுதி அம்மாகுளம் கிளை செயலாளராக இருப்பவர் தவ்பிக். இவர் இப்பகுதியில் போதை இல்லா கலாச்சாரத்தை உருவாக்குவதற்காக போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். மேலும் கஞ்சா பயன்படுத்தும் சிறுவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு அறிவுரை கூறி வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சமூக விரோதிகள் சிலர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தவ்பிக்கை சுற்றி வளைத்து கொலை செய்யும் நோக்கத்துடன் தலை, முதுகு, கை என 10 இடங்களில் கொடூரமாக வெட்டி சாய்த்தனர். இதில் படுகாயமடைந்த தவ்பிக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து அரியமங்கலம் முல்லைநகர் பகுதியைச் சேர்ந்த ப.நிஷாந்த் என்கிற பன்னீர்செல்வம், அம்மாகுளம் பகுதி எல்.ஆசைமுத்து, காந்திஜி தெரு ஆ.சந்தோஷ்குமார், செ.பாலாஜி, உக்கடை திருப்பூர குமரன் தெருவைச் சேர்ந்த ரா.ரெங்கா என்கிற ரங்கநாதன் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் மேலும் 17 வயது சிறுவன் ஒருவரையும் பிடித்து சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்த கொலை முயற்சிக்கு மூளையாக செயல்பட்ட பாஜக பிரமுகர் வினோத், பாதுஷா உள்பட இதில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகள் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. பின்னர் காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொன்மலை சரக காவல்துறை உதவி ஆணையர் காமராஜ் தலைமையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் குற்றவாளிகளில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற குற்றவாளிகளை விரைவில் கைது செய்து, கொலை முயற்சி வழக்கு பதிந்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவர் என உறுதியளித்தார்.
இந்நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநகர் மாவட்ட தலைவர் லெனின் தெரிவிக்கையில், அம்மாக்குளம் கிளை செயலாளர் தவ்பிக்கை அரிவாளால் பல இடங்களில் கடுமையாக வெட்டி, கொலை முயற்சி நடைபெற்ற இந்த சம்பவத்தில், அரியமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் திருவானந்தம், குற்றவாளிகள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யாமல் கட்டை, கல்லால் தாக்குதல், கூரிய ஆயுதத்தால் காயம் ஏற்படுத்துதல் போன்ற பிரிவுகளில் மட்டும் வழக்கு பதிவு செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஊடகத்தினர் திருவானந்தத்திடம் கேட்டபோது, அதற்கு அவர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் நவநீதகிருஷ்ணன் ரௌடி கும்பலுடன் தொடர்பில் உள்ளார். இவரது கும்பலுக்கும் மற்ற ரவுடி கும்பலுக்கும் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல்தான் இது.
இதனை திசை திருப்ப கஞ்சா வியாபாரம் நடப்பதாக குறை கூறுகின்றனர். மேலும் இச்சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட வினோத் குற்றச்செயல்களில் ஈடுபடுவதில்லை என பொய்யான தகவலை அளித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திற்கும், சங்க நிர்வாகிகளின் நற்பெயருக்கும் கலங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
அரியமங்கலம் காவல் ஆய்வாளர் திருவானந்தத்தின் இச்செயலை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் இன்ஸ்பெக்டர் திருவானந்தத்தை இடமாற்றம் செய்து அவர் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கொலைவெறி தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாஜக பிரமுகர் வினோத் மற்றும் பாதுஷா ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
குற்றவாளிகள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மீது பொய்யான குற்றசாட்டு கூறியதற்கு மறுப்பு தெரிவிக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர், இந்திய மாணவர், இந்திய ஜனநாயக மாதர் சங்கங்களின் சார்பில் இன்று அரியமங்கலம் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று அரியமங்கலம் காவல்நிலையத்தை முற்றுகையிட வந்த சங்கங்களின் நிர்வாகிகளிடம் பொன்மலை சரக உதவி ஆணையர் காமராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் குற்றவாளிகள் மீது போடப்பட்டிருந்த வழக்கினை நேற்றிரவே கொலை முயற்சி வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டு விட்டது.
மேலும் அரியமங்கலம் காவல் ஆய்வாளர் திருவானந்தம் மீது நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டு குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட அரியமங்கலம் காவல் ஆய்வாளர் திருவானந்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றோம் என்றார்.
இந்டக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகர் மாவட்ட தலைவர் பா.லெனின் தலைமை வகித்தார். சிபிஎம் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிச்செல்வன், கார்த்திகேயன், மாவட்டக்குழு உறுப்பினர் மாறன், வாலிபர் சங்க புறநகர் மாவட்ட செயலாளர் பாலா, இந்திய மாணவர் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் மோகன், மாதர் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் சரஸ்வதி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் 35-வது வார்டு சிபிஎம் மாமன்ற உறுப்பினர் சுரேஷ், பகுதி செயலாளர்கள் மணிமாறன், தர்மா, மாதர் சங்க மாநகர தலைவர் பொன்மகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தவ்பீக்-ஐ சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பாலபாரதி, மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாநிலக்குழு உறுப்பினர் பூமயில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிச்செல்வன், லெனின், மாணவர் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோர் நேறிரவு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் மருத்துவர்களிடம் தவ்பிக் உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரின் அரியமங்கலம் காவல் நிலைய முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இன்று திருச்சிக்கு முதல்வர் வரும் நிலையில் காவல் நிலைய முற்றுகைப் போராட்டம் அனைவராலும் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
source https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-sfi-protest-against-ariyamangalam-police-inspector-699552/