புதன், 28 ஜூன், 2023

இன்று பைக்… நாளை நாடு…!

 28 6 23

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருசக்கர வாகன ஒர்க் ஷாப்பில் அமர்ந்து வாகனம் பழுது பார்க்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைநகர் டெல்லியில் உள்ள கரோல்பாக் பகுதிக்கு திடீரென சென்றார். அங்கு டூ வீலர் பழுது பார்க்கும் ஒர்க் ஷாப்பிற்குள் நுழைந்த அவர் அங்கிருந்த மெக்கானிக்குடன் அமர்ந்து இரு சக்கர வாகனங்களை பழுது பார்த்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்த புகைப்படத்தினை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “இந்த கைகள் இந்தியாவை உருவாக்குகின்றன. இந்த ஆடைகளில் உள்ள கிரீஸ் நமது பெருமை மற்றும் சுயமரியாதை. அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு மக்கள் நாயகன் மட்டுமே செயல்படுகிறார். டெல்லியில் உள்ள கரோல்பாக்கில் பைக் மெக்கானிக்குகளுடன் ராகுல் காந்தி. ‘பாரத் ஜோடோ யாத்திரை’ தொடர்கிறது.” என்ற மேற்கோளுடன் பகிர்ந்துள்ளது.

முன்னதாக கடந்த மாதம் 22-ம் தேதி இரவு லாரி ஒன்றில் ராகுல் காந்தி பயணம் செய்தார். ஹரியானா மாநிலம் அம்பாலாவில் இருந்து லாரியில் ஏறிய அவர் சண்டிகர் வரை சென்றார். அம்பாலா அருகே ராகுல் காந்தி லாரியில் இருப்பது போன்ற வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலானது. இந்த காட்சி குறித்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கனரக லாரி டிரைவர்கள் இரவு முழுவதும் லாரி ஓட்டும்போது எதிர்கொள்ளும் பிரச்னைகளை புரிந்து கொள்வதற்காக ராகுல் காந்தி இரவு நேரத்தில் லாரியில் ஏறி பயணம் செய்ததாக கூறினர்.


source https://news7tamil.live/bharat-jodo-yatra-continues-rahul-gandhi-who-became-a-bike-mechanic.html