புதன், 28 ஜூன், 2023

பக்ரீத் பண்டிகையை வேலை நாளாக அறிவித்த டெல்லி பல்கலைக்கழகம் – பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு!!

 

28 8 23


பிரதமரின் வருகையை முன்னிட்டு பக்ரீத் பண்டிகையை வேலை நாளாக டெல்லி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதற்கு பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இறைவனின் தூதரான இப்ராஹீமின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

நாளை (ஜூன் 29) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், டெல்லி பல்கலைக்கழகம் நாளை வேலை நாளாக அறிவித்துள்ளது. இதற்கு அப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


நாளை மறுநாள் நடைபெறும் டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். மேலும், அங்கு மூன்று புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு, அனைத்து ஊழியர்களுக்கும் பக்ரீத் பண்டிகை நாளான ஜூன் 29 ஆம் தேதியை வேலை நாளாக டெல்லி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பக்ரீத் பண்டிகை கொண்டாடும் ஊழியர்களுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பிற்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அறிவிப்பை பல்கலைக்கழக நிர்வாகம் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

source https://news7tamil.live/delhi-university-declares-bakrit-festival-as-working-day-professors-strongly-protest.html