புதன், 28 ஜூன், 2023

அமெரிக்காவில் எதிர்ப்பு: மணிப்பூர் கலவலத்தை தடுக்காமல் பிரதமர் ஊர் சுற்றுகிறார்; வைகோ கடும் தாக்கு

 

28 6 23

Vaiko press meet
Vaiko press meet

கோவை விமான நிலையத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தந்தை பெரியார் இதற்காக வாழ்நாள் முழுவதும் போராடினார்.

பிறகு கலைஞர் கருணாநிதி இதற்கான சட்டத்தை கொண்டு வந்தார். அதனை தொடர்ந்து பல்வேறு போராடங்களைக் கடந்து திராவிட மாடல் ஆட்சியில் மு.க ஸ்டாலின் முயற்சி மேற்கொண்டு உயர் நீதிமன்றம் இதில் தீர்ப்பு வழங்கியிருப்பது சமூக நீதியை பாதுகாப்பதற்கு ஒரு நல்ல காரணியாக இருக்கும்.

விலைவாசி கூடும் போதெல்லாம் ஏழை மக்கள் மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கத்தான் செய்யும். அதே சமயம் விவசாயிகளுக்கு ஓரளவு விலை கிடைப்பது மகிழ்ச்சியை அளிக்கும்” என்றார்.

தொடர்ந்து தி.மு.கவிற்கு வாக்களிப்பது ஊழலுக்கு வாக்களிப்பது போல் என்று பிரதமர் மோடி பேசியது குறித்து கருத்து தெரிவித்த வைகோ, “மோடி உலக நாடுகளை சுற்றி வந்து இந்தியாவிற்கு பெருமை தேடித் தரவில்லை.

அவருக்கு அமெரிக்காவிலேயே அதிக எதிர்ப்புகள் இருந்தது. மணிப்பூரில் ஏற்பட்டு கொண்டிருக்கின்ற கலவரத்தை தடுக்காமல் அவர் தனது கடமையை மறந்து விட்டு ஊர் சுற்றி வந்தார். அவர் பொறுப்பற்றவர் என்று நான் குற்றம் சாட்டுகின்றேன்” என்றார்.

பெரியார் பல்கலைக்கழக விழாவில் கருப்பு உடை அணியக் கூடாது என்ற சுற்றறிக்கை வந்துள்ளது குறித்து கருத்து தெரிவித்த அவர், “கருப்பு இருக்கக் கூடாது என்றால் கருமேகங்கள் சூழும் பொழுது கருப்பாக தானே இருக்கும் அப்பொழுது அவர் தடுத்து விடுவாரா?, ஆளுநரின் உளறலுக்கு எல்லையே இல்லை. ஆளுநர் இந்துத்துவாவில் இருந்து தான் நாடே வந்திருக்கிறது என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டிற்கு விரோதமாக என்னவெல்லாம் செய்ய முடியுமோ திராவிட இயக்க கருத்துகளுக்கு விரோதமாக பேசிக் கொண்டிருக்கிறார். அவரது செயல்கள் கண்டனத்திற்குரியது. அவர் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும். அவரை திரும்ப பெற வேண்டும் என்றுதான் நாங்கள் கையெழுத்து இயக்கத்தையே நடத்துகின்றோம்” என்று கூறினார். நேற்று காலை பெரியார் பல்கலைக்கழகம் கருப்பு உடை குறித்து சுற்றறிக்கை அனுப்பியிருந்த நிலையில் கடும் எதிர்ப்பு எழுந்த பின்னர் அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

source https://tamil.indianexpress.com/tamilnadu/mdmk-leader-vaiko-condemns-pm-modi-over-manipur-issue-708535/