வியாழன், 29 ஜூன், 2023

சமூக வலைதள வதந்தி மூலம் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் வாய்ப்பு : டிஜிபி சைலேந்திரபாபு

 

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் மூலமாக சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.


அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தலைமையில் ஓய்வு பெற உள்ள தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.சென்னை உயர்நீதிமன்ற வளாக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேசியதாவது:”தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு எங்களைப் போன்ற காவலர்களுக்கு வழிகாட்டும் நட்சத்திரமாகவும், காவலர்களை ஊக்குவிப்பவராகவும் திகழ்கிறார். சமூக வலைதளங்களின் மதிப்பு என்ன என்பதை டிஜிபியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அவருடன் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவத்தை தந்துள்ளது” என்றார்.

அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா பேசும் போது: “அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் மனிதாபிமானத்துடன் செயல்படுவதற்கான பயிற்சியை நான் வழங்குவேன் என்பதை முதன் முதலில் கூறிய ஒரே காவல் அதிகாரி சைலேந்திரபாபு தான். எந்த நிமிடத்தில் வேண்டுமானாலும் பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு காவல் அதிகாரியாக திகழ்ந்தவர். பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு எந்தவித அச்சமும் இன்றி செல்ல வழிவகை செய்தவர் டிஜிபி சைலேந்திரபாபு” என்றார்.

பின்னர் சைலேந்திரபாபு பேசியதாவது: “தமிழ்நாட்டில் கடந்த 8 மாதங்களில் காவல்நிலையங்களில் எந்த மரணமும் நிகழவில்லை.மனிதருக்குள் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். அந்தவகையில் காவல்துறைக்கும், வழக்கறிஞருக்கும் ஒத்துழைப்பு அவசியம்.மிருகங்களை போன்ற பலமில்லாதவர்கள் மனிதர்கள். ஆனால் ஒத்துழைப்பு மூலம் மிருகத்தை கூண்டுக்குள்ளும் மிருக காட்சி சாலைக்கும் நம்மால் கொண்டுவர முடியும்

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் மூலமாக சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.மனிதநேயத்துடன் காவல் துறை பொதுமக்களிடம் நடக்க வேண்டும் என்பதற்காக 2300 காவல் நிலையங்களில் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டு பொதுமக்கள் புகார்கள் கனிவுடன் பெறப்படுகின்றன.

இன்றைய காலகட்டத்தில் காவல்துறையில் பணியாற்றுபவர்களை தட்டிக் கொடுத்து பாராட்டி வேலை வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது. காவல்துறையின் தற்போதைய நிலையை மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இளைஞர்கள் ஏராளமானோர் இந்த துறைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அந்த வகையில் காவல்துறையில் காவல்துறையில் உதவி ஆய்வாளர்கள் 444 பேரும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்கள்.இதன் மூலமாக கடந்த காலங்களில் காவல்துறையில் எதிர்மறையாக நடைபெற்ற நிகழ்வுகள் குறைவதற்கான வாய்ப்புகள் தற்போது ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காவல்துறை இணைக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 36,000 ஆக இருந்து. தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 ஆயிரமாக குறைந்துள்ளது” என சைலேந்திரபாபு கூறினார்.


source https://news7tamil.live/possibility-of-law-and-order-being-affected-due-to-rumors-spread-on-social-media-dgp-sailendrababu.html