18 6 23
தமிழகத்தில் பாசிச சக்திகள் அரசியல் ஜல்லிக்கட்டை தொடங்கியுள்ளனர் என தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த தடையில்லை என உச்ச நீதிமன்ற தீர்ப்பைப் பெற்று தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டி, ஜல்லிக்கட்டு பேரமைப்புகளின் சார்பில் புதுக்கோட்டையில் இன்று நன்றி அறிவிப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு தீர்ப்பு வெற்றிக்கு முதல்வர் நடத்திய சட்ட போராட்டம் தான் காரணம், இந்த விழா முதலில் மதுரையில் தான் நடைபெற இருந்தது, ஆனால் தமிழத்திலேயே அதிக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் மாவட்டம் புதுக்கோட்டை என்பதால், நன்றி தெரிவிப்பு விழா புதுக்கோட்டையில் நடத்தப்படுகிறது எனக் கூறினார்.
தற்போது தமிழகத்தில் பாசிச சக்திகள் அரசியல் ஜல்லிக்கட்டை தொடங்கியுள்ளனர், ஆனால் அவர்களால் நேர்வழியாக வரமுடியாமல், அவர்கள் புறவாசல் வழியாக விளையாடி வருகின்றனர் எனக்கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதனை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் எனவும் கூறினார். இதனை அடுத்து 2014 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது, இப்போது கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் ஜல்லிக்கட்டுக்கு உரிமை கொண்டாடுகிறார்கள் என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுகவின் கிளை செயலாளர்களை கூட உங்களால் தொட்டு பார்க்க முடியாது, இன்று மட்டும் அல்ல என்றுமே மத்திய அரசுக்கு திமுக அஞ்சியதில்லை, கருணாநி வழியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார், தொடர்ந்து குரல் கொடுப்பார் எனக் கூறினார்.
எத்தனை மோடிகள் வந்தாலும், எத்தனை அமித்ஷாக்கள் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது எனக்கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், IT, ED CBI இவை தான் பாஜவின் தொண்டர் படை, தேர்தல் நேரத்தில் மட்டும் இந்த படை பணி செய்யும் எனக் குற்றம் சாட்டினார்.
செந்தில் பாலாஜியை 18 மணி நேரம் சோதனை என்ற பெயரில் கொடுமை படுத்தியுள்ளனர், எதிர்கட்சிகளின் வீடுகளில் சல்லடை போட்டு தேடும் பாஜகபின் லட்சணம் என்ன எனவும் அவர் வினவினார்.
தமிழக ஆளுநர் தன்னை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி போல் நினைத்து கொள்கிறார், முதல்வர் சொல்லும் இடத்தில் கையெழுத்து போடும் வேலைதான் ஆளுநருக்கு, மத்திய அரசின் ரப்பர் ஸ்டாம் பதிவி தான் ஆளுநர் பதவி என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
20 கோப்புகள் ஆளுநர் இன்னும் நிலுவையில் வைத்துள்ளார், அதில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் குறித்த ஊழல் பட்டியலும் அடங்கும், முன்னாள் அதிமுக அமைச்சர்களை ஆளுநர் காப்பாற்ற முயல்கிறார் எனவும் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2019, 2021 தேர்தல்களை போல வருகின்ற 2024 தேர்தலிலும் அதிமுக, பாஜக கட்சியினரை ஒட ஒட விரட்டியடிக்க வேண்டும் என பொதுமக்களை பார்த்து கேட்டுக்கொண்டார்.
source https://news7tamil.live/fascist-forces-have-launched-a-political-jallikattu-in-tamil-nadu-minister-udayanidhi-stalin.html