வெள்ளி, 30 ஜூன், 2023

சங்கர் ஜிவால் ஐபிஎஸ்! அவர் கடந்து வந்த பாதை என்ன?

 

தமிழ்நாடு காவல்துறையின் உச்சபட்ச பொறுப்பான சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள சங்கர் ஜிவால் கடந்து வந்த பாதை

1990-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சங்கர் ஜிவால் உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா என்ற பகுதியைச் சேர்ந்தவர். என்ஜினீயரிங் படித்தவர். அதில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தமிழ், ஆங்கிலம் மற்றும் உத்தரகாண்டின் தாய்மொழியான குமானி மொழியில் புலமை பெற்றவர்.

சங்கர் ஜிவால் 1993 ஆம் ஆண்டு ஏஎஸ்பியாக மன்னார்குடியில் தனது பணியை தொடங்கினார். இதன் பிறகு 1994 ஆம் ஆண்டு சேலம் புறநகர் ஏஎஸ்பி, 1995 ஆம் ஆண்டு சேலம் மாவட்ட போலீஸ் எஸ்பி, 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு கவர்னரின் பாதுகாப்பு அதிகாரி, 1997 ஆம் ஆண்டு மதுரை நகர சட்டம்- ஒழுங்கு துணை ஆணையர், 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் COMMANDANT, 1999 ஆம் ஆண்டு மதுரை மாவட்ட போலீஸ் எஸ்பியாக பணியாற்றினார்.

இதையடுத்து 2000 ஆம் ஆண்டில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மண்டல இயக்குனர், 2004 ஆம் ஆண்டு டிஐஜியாக பதவி உயர்வு பெற்று அதை பிரிவில் பணியை தொடர்ந்தார் சங்கர் ஜிவால். இதன் பிறகு அவர் 2006 ஆம் ஆண்டு திருச்சி காவல் ஆணையர், 2008 ஆம் ஆண்டு மாநில உளவுத்துறை டிஐஜியாக பணியாற்றி உள்ளார்.

பிறகு 2008 ஆம் ஆண்டு சங்கர் ஜிவால் ஐஜியாக பதவி உயர்வு பெற்று உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு மாநில உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டு மாநில உளவுத்துறை ஐஜியாக மாற்றப்பட்டு பணியை தொடர்ந்தார்.

2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகு சங்கர் ஜிவால் சிறப்பு அதிரடி படை ஐஜியாக மாற்றப்பட்டார். 3 ஆண்டுகள் உளவுத்துறையில் பணியாற்றி அதிக அனுபவம் பெற்றவர் சங்கர் ஜிவால். 2015 ஆம் ஆண்டு ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று சிறப்பு அதிரடி படையிலேயே பணியை தொடங்கினார்.

2017 ஆம் ஆண்டு ஆவின் துறையில் விஜிலென்ஸ் பிரிவிலும், 2019 ஆம் ஆண்டு ஆயுதப்படை பிரிவு ஏடிஜிபியாக பணியாற்றினார். இதன் பிறகு ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி சென்னை காவல் ஆணையராக சங்கர் ஜிவால் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், தமிழ்நாடு காவல்துறையின் புதிய சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவாலை நியமித்து அரசு அறிவித்துள்ளது. சென்னை காவல்துறையின் காவல் ஆணையராக 2 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், தற்போது காவல்துறையின் உச்சபட்ச பொறுப்பான சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்

source https://news7tamil.live/who-is-this-shankar-jiwal-ips-what-path-did-he-take.html