18 6 23
மே மாதம் முதல் வாரத்தில் துவங்கிய வன்முறை மற்றும் ஊரடங்கு ஒரு மாதம் கடந்து இன்றளவும் நீடிக்கிறது. என்னதான் நடக்கிறது மணிப்பூரில் என்பது குறித்து விரிவாக காணலாம்.
கர்நாடக தேர்தலும், கேரளா ஸ்டோரி படமும் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக இருந்த நேரத்தில்தான் மணிப்பூரில் வன்முறை வெடித்தது. அதுவரை மணிப்பூர் வன்முறை குறித்த எந்த செய்திகளும் கவனம் பெறத் தொடங்கவில்லை. பிரபல குத்துச் சண்டை வீராங்கணையான மேரி கோம் தனத ட்விட்டர் பக்கத்தில் “எனது மாநிலம் பற்றி எரிகிறது… மோடி, அமித்ஷா ஆகியோர் உதவுங்கள்” என குறிப்பிட்டிருந்தார். மேரிகோமின் இந்த ட்வீட்டிற்கு பிறகுதான் மணிப்பூர் வன்முறை குறித்து உலகம் பேசத் தொடங்கியது.
மணிப்பூர் வன்முறை : அடிப்படை காரணம் என்ன..?
வட கிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் மூன்று முக்கிய இனக்குழுக்களான நாகா, குக்கி மற்றும் மீதேய் இனங்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் நாகா மற்றும் குக்கி இன மக்கள் பழங்குடி பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் மணிப்பூர் உயர்நீதிமன்றம் மீதேய் மக்களுக்கு பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரைகள் குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசுக்கு நான்கு வாரங்களுக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொண்டது.
மீதேய் மக்களை பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. மணிப்பூர் மாநில அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் சார்பில் கடந்த மே 3ம் தேதி பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். இந்த பேரணியில் நாகா இன மக்களும், குக்கி இன மக்களும் திரளாக பங்கெடுத்துக் கொண்டனர். இந்த பேரணியில்தான் ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று மீதேய் இன மக்களின் மீது தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த தாக்குதல் படிப்படியாக வன்முறையாக மாறியது.
மணிப்பூரில் நாகா மற்றும் குக்கி இன பழங்குடி மக்கள் 40% க்கும் மேல் வசித்து வருகின்றனர். பழங்குடி அல்லாத மீதேய் இன மக்கள் இம்பாலைச் சுற்றியுள்ள பள்ளத்தாக்கு பகுதியில் பெருமளவில் வசித்து வருகின்றனர். ஆனால் பழங்குடி மக்களான நாகா மற்றும் குக்கி இன மக்கள் மலைகிராமங்களை சுற்றி வாழ்ந்து வருகின்றன. மாநிலத்தின் விரிவாக்க பணிகளுக்கு மலைகிராமங்களில் இருந்து குக்கி இன மக்களை அரசு வெளியேற்ற முற்பட்டதும் தொடர் போராட்டத்திற்கான ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
இணைய சேவை முடக்கம் , ஊரடங்கு, துப்பாக்கிச்சூடு :
இரண்டு குழுக்களுக்கும் ஏற்பட்ட வன்முறை கொஞ்சம் கொஞ்சமாக பரவ ஆரம்பித்து மாநிலம் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. பழங்குடி மக்களாக இருக்கிற நாகா மற்றும் குக்கி இன மக்கள் கிருஸ்துவ மதத்தை பின்பற்றுபவர்கள், மீதேய் இன மக்கள் பெறும்பாலும் இந்து மதத்தை பின்பற்றக்கூடியவர்கள்.
கடந்த மே மாதம் 4ம் தேதி கலவரம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் வன்முறை தொடர்பாக போலி வீடியோக்கள் பரவுவதால் இணைய சேவை முடக்கப்பட்டது. அதன் பின்னர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டது. கலவரத்தின் தீவிரம் மணிக்கு மணி அதிகரித்துக் கொண்டே இருந்ததால் கலவரக்காரர்களை கண்டதும் சுட மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
மணிப்பூர் வன்முறையில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவலர்கள் சுட்டுக் கொலை, ஆயுதங்கள் கொள்ளை!
மணிப்பூர் வன்முறையில் பொதுமக்கள் பலர் உயிரிழந்த நிலையில் 6 ராணுவ வீரர்கள் உட்பட 2 காவலர்களும் வன்முறையாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த வன்முறையின் போது காவல் நிலையங்கள் மற்றும் ராணுவ வீரர்கள் மற்றும் காவலர்களிடம் இருந்து பல ஆயுதங்கள், துப்பாக்கிகள், தோட்டக்கள் போன்றவை வன்முறையாளர்களால் கொள்ளையடிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. கலவரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் திரும்ப ஒப்படைக்குமாறு மாநில முதல்வர் உட்பட பல தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இம்பால் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுசிந்த்ரோ மேதேயி தனது வீட்டின் அருகே ஒரு பெட்டி ஒன்றை வைத்தார். அதில் காவல் நிலையங்களில் இருந்து எடுத்துச் சென்ற ஆயுதங்களை தயக்கமின்றி இந்த பெட்டியில் போடுங்கள் என எழுதி ஒட்டியிருந்தார். இதனை ஆங்கிலம் மற்றும் மேதேயி மொழியில் எழுதியிருந்தார்.
இதன் பின்னர் கொள்ளையடிக்கப்பட்ட 130க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் அந்த பெட்டியில் திரும்ப கிடைத்துள்ளன.
உள்துறை அமைச்சர் நேரில் சந்திப்பு : அமைதிக் குழு அமைப்பு ..!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களை 3 நாட்கள் நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து அம்மாநில முதலமைச்சர், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா “ இந்த கலவரம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும். வன்முறை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 6 வழக்குகளை சிபிஐ விசாரிக்கும். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட ஆளுநர் தலைமையில் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய அமைதிக் குழு ஒன்று அமைக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி மணிப்பூரில் அம்மாநில ஆளுநர் தலைமையிலான அமைதிக் குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்தக் குழுவில் மணிப்பூர் மாநில முதலமைச்சர், சில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உறுப்பினர்களாக இடம்பெற்றனர்.
தணியாத பதற்றம் : அமைச்சர் வீடு தீ வைப்பு
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங்கின் வீடு வன்முறையாளர்களால் தீவைக்கப்பட்டது. பாஜக அமைச்சரான ஆர்.கே.ரஞ்சன் சம்பவம் நடைபெற்ற போது கட்சிப் பணிகளுக்காக கேரளா மாநிலம் கொச்சிக்கு சென்றிருந்தார். அமைச்சர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து வன்முறையாளர்கள் அவரது வீட்டிற்கு தீவைத்தனர்.
அதே போல மணிப்பூர் மாநில பொதுப்பணித் துறை அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான கோவிந்தாஸின் வீடு வன்முறையாளர்களால் சூறையாடப்பட்டுள்ளது. அவரது வீடு பீஷ்னுபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வன்முறையாளர்கள் அவரது வீட்டை தீவைக்கும் வீட்டில் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலை… என்ன..?
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கலவரத்தில் 9பேர் கொல்லப்பட்டுள்ளனர், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கிட்டத்தட்ட 11 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 20ம் தேதி வரை இணைய சேவை துண்டிப்பு தொடரும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. மணிப்பூர் பழங்குடியின தலைவர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. பதற்றத்தை தணிக்க அஸ்ஸாம் ரீபில் ஃபோர்ஸ் மற்றும் இந்திய ராணுவம் ஆகியவை இணைந்து செயல்படுகின்றன.
இம்பால் பள்ளத்தாக்கில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியில் இந்திய ராணுவம் சனிக்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தியது. இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் ஜூன் 18, ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவை தளர்த்தினர். இதன் மூலம் மருந்துகள் , உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்கள் வாங்குவதற்கு வசதியாக இந்த ஊரடங்கு தளர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு :
மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மீது எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக குற்ற்ச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். காங்கிரஸ், சிவசேனா, ஆம் ஆத்மி, மணிப்பூர் முன்னாள் முதல்வர் உள்ளிட்ட பலர் மணிப்பூர் கலவரத்தில் பிரதமர் மோடி மௌனம் காப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஜூன் 18ம் தேதி ஞாயிற்றுக் கிழமை “மான்கிபாத்” நிகழ்ச்சியில் வானொலியில் பேசிய பிரதமர் மோடி மணிப்பூர் கலவரம் குறித்து எதுவும் பேசவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில் மான்கிபாத்தில் மணிப்பூர் கலவரம் குறித்து எதுவும் பேசவில்லை என மணிப்பூர் மக்கள் வானொலியில் வீதியில் போட்டு தீ வைத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேரிகோம் என்ன ஆனார்..??
மணிப்பூரில் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து வரும் வன்முறை முடிவுக்கு வந்தபாடில்லை. கலவரத்தின் ஆரம்ப நாட்களில் “எனது மாநிலம் பற்றி எரிகிறது” என பதிவிட்ட பிரபல குத்துச் சண்டை வீராங்கணை மேரிகோம் அதன் பின்னர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. மே 4ம் தேதிக்கு பிறகு மேரிகோமின் ட்விட்டர் கணக்கிலிருந்து எந்த தகவலும் பதிவு செய்யப்படவில்லை என்பது பதற்றத்தை அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பல சிக்கல்கள் நீடித்துள்ள வட கிழக்கு மாநிலங்களின் பூகோள அரசியலை போல மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதும் பொது வெளிச்சத்திற்கு வராமல் மர்மமாகவே உள்ளன. மர்மம் விலகி, மக்கள் புழக்கம் இயல்பாகி , மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
– ச.அகமது, நியூஸ் 7 தமிழ்
source https://news7tamil.live/continued-violence-internet-shutdown-firing-what-is-happening-in-manipur.html