25 6 23
அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவர் வகித்துவந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரவையை முத்துசாமி கூடுதலாக கவனித்துவருகிறார்.
இந்த நிலையில் ஈரோடு கதிரம்பட்டி பகுதியில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “பள்ளிகள், கோவில்கள், பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் மதுக்கடை இருக்க கூடாது என்பதை கவனித்துவருகிறோம்” என்றார்
மேலும், மதுக்கடைகள் மூடப்பட்டதால், மதுப்பிரியர்கள் கள்ளச் சாராயத்தை நோக்கி நகர்ந்துவிடக் கூடாது. இதுமட்டுமின்றி இன்னும் சில கடைகளை மூட நாங்கள் உத்தரவிட்டுள்ளோம்” என்றார்.
தொடர்ந்து, “இரவில் பிரச்னை இல்லை. அதிகாலையில் பிரச்னை உள்ளது. இது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
இந்த விஷயத்தில் ஏதோ ஒரு கடையில் நடந்த தவறை தமிழ்நாடு முழுக்க நடந்தது போல் விளம்பரப்படுத்திவிட்டனர். இது மிகவும் தர்மசங்கடமாக இருந்தது.
அதுபோன்ற தவறுகள் 5 சதவீதம் மட்டுமே இருந்தது” என்றார். தொடர்ந்து மதுக்கடைகள் மூடப்பட்டதால் மதுபிரியர்கள் வேறு கடைக்கு செல்வார்களா? என்ற கேள்விக்கு, “அந்தப் பிரச்னையும் கவனத்தில் கொள்ளப்படும்” என்றார்.
மேலும் டாஸ்மாக் ஊழியர்களின் பாதுகாப்பு விஷயங்களும் இந்த ஆய்வில் கணக்கீடு கொள்ளப்பட்டன என்றார்.
அண்மையில் தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-muthuswamy-said-that-more-liquor-shops-will-be-closed-in-tamil-nadu-706055/