20 6 23
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெற்ற விவகாரம் குறித்து எழுப்பிய ஆர்.டி.ஐ கேள்விக்கு ஆர்.பி.ஐ அளித்த பதில் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் 19-ஆம் தேதி ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது. மேலும் மே 23-ம்தேதி முதல் வங்கிகள் மூலமாக ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கு செப்.30-ம் தேதி வரை அவகாசமும் தரப்பட்டது. அனைத்து ரூ.2000 நோட்டுகளையும் புழக்கத்தில் இருந்து அகற்ற ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ள நிலையில் வங்கிகள் அந்த நோட்டுகளை பொதுமக்களுக்கு விநியோகிக்க கூடாது என்றும் அறிவுறுத்தியது.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு கடும் விமர்சனத்திற்கு ஆளானது. புதிய ரூ.2000 நோட்டுகளை 2016-ஆம் ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்திய நிலையில் சில ஆண்டுகளிலேயே திரும்பப் பெறுவதால் அதற்காக ஆன செலவுகள் வீண் தானே என கண்டனம் எழுந்தது. மேலும் ரூ.2000 நோட்டுகளுக்காக நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம் எந்திரங்களில் பணம் நிரப்பும் பகுதி மாற்றி அமைத்தது எல்லாம் வீணாகி போனதே எனவும் விமர்சிக்கப்பட்டது. குறைந்த காலக்கெடுவில் ரூ.2000 நோட்டுகளை திரும்பப்பெற்றதற்கு பதில் அதை அறிமுகப்படுத்தாமலே இருந்திருக்கலாம் எனவும் பல்வேறு எதிர் கட்சியினர் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே, ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெற்றதற்கான காரணங்களை கூறுமாறு ஆர்.டி.ஐ வாயிலாக ஆ.பி.ஐ-இடம் கேள்விகளை முன்வைத்திருந்தார். இதற்கு பதில் அளித்த ஆர்.பி.ஐ, வெளிநாடுகளுடனான உறவை பாதிக்கும் என்பதால் தகவல்களை வழங்க முடியாது என பதில் அளித்தது.
ரிசர்வ் வங்கியின் இந்த பதில் கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சாகேத் கோகலே, ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெற்றதற்கான காரணத்தை வெளியிட்டால், அது எப்படி வெளிநாடுகளுடனான உறவை பாதிக்கும் என வினவியுள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சிதாராமனும், ஆர்.பி.ஐ-யும் உரிய பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
source https://news7tamil.live/the-issue-of-withdrawal-of-rs-2000-notes-rbis-response-to-criticism.html